நாள் - 10
அம்மாவின் பாதங்கள் அத்தனை அழகு. பாதங்களின் நிறமும் சருமத்தின் கோடுகளும் அவித்த மரவள்ளிகிழங்கை நினைவுப்படுத்தும். மூன்று பருப்புகள் இருக்கும் வேர்கடலைகளை வரிசையாய் அடுக்கி வைத்ததைப்போன்ற நீளமான விரல்கள்.
எங்கள் வீட்டுக்கூடத்தின் தரையிலமர்ந்து வீட்டுப்பாடங்கள் செய்தபடி சமையலறை திரைச்சீலையின் கீழ் தெரியும் அம்மாவின் பாதங்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். அவை ஓரிடத்தில் நிற்காது நகர்ந்துகொண்டேயிருக்கும். வலமும் இடமும் நடக்கும். வட்டமடிக்கும், பரணிலிருந்து பொருள் எடுக்க கொஞ்சமாய் எக்கும் . அடுப்படியில் கால் மாற்றி கால்மாற்றி நின்று சமைக்கும் .
பள்ளிக்கு அழைத்து செல்வது, வாசல் பெருக்குவது , தையல்மிஷினை மிதிப்பது என்று சதா உழைத்த பாதங்கள் அம்மாவினுடையது. மதியநேரத்தில் ஓய்வாக படுத்திருக்கும் அம்மாவின் பாதங்களை வருடியபடி இருப்பேன். பொம்மென்று பூனைக்குட்டியின் மென்மையுடன் இருக்கும்.
சென்ற முறை ஊருக்கு சென்றிருந்தப்போது அம்மாவின் தளர்ந்தப் பாதங்களை மடியில் வைத்து தைலம் தடவிக்கொண்டிருந்தேன். தம்பி அம்மா இப்பொதெல்லாம் அதிகம் நடப்பதேயில்லை என்று குறைப்பட்டுக்கொண்டான். “அம்மா நடந்தவரை போதும்டா” என்றேன்.
.jpg)
Comments
Post a Comment