சந்திரா அத்தை
சந்திரா அத்தை
சந்திரா அத்தைக் காலமாகி விட்டாளாம். திடீரென வலிப்பு வந்ததால் கீழே விழுந்து பின் மண்டையில் அடிப்பட்டு மரணம் என்றாள் அம்மா. “உன்கிட்ட இப்போ சொல்ல வேண்டாம்னு தான் நெனச்சேன், நீ அவ பின்னாடியே சுத்திண்டு இருப்பியே , அத்தை செல்லமாச்சே நீ , என்னால சொல்லாம இருக்க முடியலடி..” என்றாள் அம்மா. எனக்கு மூச்சுத் திணறுவது போல் இருந்தது. பதில் பேசவே முடியவில்லை.
“ஏன்மா இப்படி”என ஏதோ சொல்லத் தொடங்கியவள், மேலே பேச்சு
எழும்பாமல் நிறுத்திவிட்டேன்.
'பானு, நீ அழாதடி,
அவ ஆயுசு முடிஞ்சிடுச்சு. நாம என்ன
செய்ய முடியும்' என்ற அம்மா தொடர்ந்து , “முடிஞ்சா காலையில எடுக்கறதுக்குள்ள
வந்துடுடி” என்றாள். நான் பேசாமல் இருக்கவும், “திரும்பவும் சொல்றேன் பானு, ரொம்ப அலட்டிக்காத, இனிமேலாவது அவ நிம்மதியா இருக்கட்டும். அவ புண்ணியாத்மாடி,
நேரே சொர்க்கம் தான். அடுத்த பிறவியே அவளுக்குக் கிடையாது , நீ கவலைப்படாதே என்ன,
முடிஞ்சா வரப் பாரு,சரியா? நானும் அப்பாவும் உடனே கிளம்பறோம் ” என்று அம்மா பேசி முடிக்கும் முன் தொடர்பைத்
துண்டித்தேன்.
அப்படியே தொப்பென
சோபாவில் அமர்ந்தேன். “அவளுக்குப் பிறவியே கிடையாது...’ அம்மாவின் குரல் காதில்
ஒலித்தது. இந்தப் பிறவி மட்டும் அவளுக்கு இருந்ததா என்ன, எத்தனை கஷ்டப்பட்டு
விட்டாள் பாவம்.
சந்திரா அத்தையின் இறப்பு செய்தி என்னை முழுவதுமாய் நிலைகுலையச்
செய்து விட்டது. பழைய நினைவுகள் மனத்தில் எழுந்தவண்ணம் இருக்க, எந்த வேலையும் செய்யாமல் அடிவயிற்றைக்
கட்டிக்கொண்டு வெறுமே படுத்துக்
கொண்டிருக்கலாம் போல இருந்தது. ஆனால் துக்கத்துக்குப்
போயாக வேண்டும் , அத்தையின் முகத்தை இறுதியாய் ஒருமுறை பார்த்துவிட வேண்டும் .
இப்படி அழுது கொண்டிருந்தால் முடியாது.
இவர் வேறு ஊரில் இல்லை, உடனடியாக மனத்தைத்
திடப்படுத்திக்கொண்டு அண்ணன் ரகுவை
தொலைபேசியில் அழைத்தேன் .
என் குரலைக்
கேட்டவுடன் அவன் புரிந்து கொண்டுவிட்டான். “அம்மா எனக்கும் இப்போதான் ஃபோனில் சேதி
சொன்னா, நீ என்ன பண்ணலாம்னு இருக்க?” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான். அண்ணா
எப்பவும் இப்படித் தான். அதிகமாய் அலட்டிகொள்ளாத சுபாவம். “அண்ணிகி்ட்ட குழந்தைகள
விட்டுட்டு நீயும் நானும் மட்டும் மாயவரம் போயிட்டு வரலாம், நீ என்னை
அழைச்சுகிட்டு போறியா அண்ணா?” என்றேன் . ஒரு நிமிடம் யோசித்தவன், “சரி, நீ குழந்தைகளோடு கிளம்பி இங்க வா, நாம போகலாம்” என்றான்.
அதற்குப் பின் நான் எப்படிக் கிளம்பினேன், என்ன எடுத்து
வைத்தேன் என எதுவுமே நினைவில்லை. கைகள் தன் போக்கில் வேலை செய்ய இதோ ரகுவோடு கிளம்பியாகி விட்டது. பன்னிரெண்டு மணிக்குள் போய்ச்
சேர்ந்துவிடலாம். “ஏதாவது சாப்பிடறியா?”
என ரகு கேட்க வேண்டாம் என மறுத்துவிட்டேன். அவன் மட்டும் வழியில் ஒரு ஹோட்டலில்
சாப்பிட்டான்.
சந்திரா அத்தை
அப்பாவின் ஒன்றுவிட்ட தங்கை. நாகு தாத்தா
என்னும் நாகராஜ் அப்பாவின்
சித்தப்பா. மாயவரத்தில் பக்கத்து வீடு.
நாகு தாத்தாவுக்கு ஆறு பெண்களும் ,ஒரு மகனுமாய் மொத்தம் ஏழு குழந்தைகள். சிவா தான்
கடைக்குட்டி. எனக்கு சித்தப்பா முறை
என்றாலும் ரகுவின் வயதையொத்தவர் என்பதால்
சிவாவையும் அண்ணா என்று தான் அழைப்பேன்.
மூத்தவள் ஜெயா அத்தை, இரண்டாமவள் பிரபா. மூன்றாமவள் சந்திரா அத்தை. கமலா, உமா,
நித்யா மூவரும் அவளுக்கு இளையவர்கள்.
சித்தப்பா மகள்கள் என்றாலும் அப்பாவுக்குத் தங்கைகள் மேல் அலாதிப் பிரியம்.
அப்பாவுடன் பிறந்தவர்களில் இரண்டு சகோதரிகள் உண்டு, அவர்கள் மீதுள்ள அதே பாசம்
அவருக்கு அந்தத் தங்கைகளிடமும் இருந்தது. அவர்களும் அண்ணா, அண்ணா என அவரின் மேல் பாசத்தைக் கொட்டினார்கள். முதல்
மூன்று பெண்களும் பள்ளிப்படிப்போடு சரி, கல்லூரி எல்லாம் கிடையாது. கடைசி மூவரும்
கல்லூரி சென்று டிகிரி வாங்கினார்கள்,அப்பா
தான் நாகு தாத்தாவிடம் பேசி அவரைச் சம்மதிக்க வைத்தார் எனஅத்தைகள் சொல்லிக்
கேட்டு இருக்கிறேன். நிறைய நிலபுலன். பட்டமங்கலத் தெருவில் பெரிய மளிகைக் கடை. அவர்களுக்குக் காசு பணத்துக்கெல்லாம் குறைவில்லை, நித்யா அத்தையைத்
தவிர மற்ற எல்லாருமே திருமண வயதை எட்டிவிட்டார்கள் . இருந்தாலும் அப்போது யாருக்கும்
திருமணமாகி இருக்கவில்லை.
நாகு தாத்தாவின் மனைவி மதுரம் சித்தி குணத்தில் தங்கம்.
உருவத்தில் தான் கடவுள் அவளிடம் அவ்வளவு கருணை காட்டவில்லை. சித்தி பாட்டி நல்ல
கருப்பு . முன்பற்கள் தூக்கலாக வாய்க்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். ஒடிசலான
தேகம் தான். நல்ல உயரம். கடும் உழைப்பாளி.
அவளுடைய அத்தனை லட்சணங்களும் மூத்த பெண் ஜெயா அத்தைக்கும்
அமைந்திருந்தது. ஜெயா அத்தை வேலையில் கெட்டி. தெருவடைத்து அவள் கோலம் போட்டால் ஊர்
கண்ணெல்லாம் எங்கள் வீட்டு வாசலில் தான். சமையலிலும் கில்லாடி. அப்பாவுக்கு
அத்தையின் வத்தகுழம்பென்றால் அவ்வளவு பிரியம். அவள் குழம்பு வைத்தால் அப்பாவுக்கு
ஒரு கிண்ணம் கண்டிப்பாய் வந்து விடும். பதவிசாக காரியங்கள் செய்வாள் என்பாள்
அம்மா.
“இப்பல்லாம்
குணத்தை, காரியத்தை யார் பாக்கறா, முக அழகுதான் முக்கியமா இருக்கு. ஊரெல்லாம்
தேடினாலும் நம்ம ஜெயாவைப் போலப் பொண்ணு யாருக்குக் கிடைக்கும்” என்று அம்மா
அடிக்கடி புலம்புவாள்.
ஐந்தாறு வருடங்களாக வலைவீசித் தேடியும் ஜெயாவுக்கு எந்த வரனும் அமையவில்லை. மற்ற
அத்தைகளுக்குத் தோற்றத்தில் எந்த குறையுமில்லை. வர்ற வரனை ஏன் விடுவானேன்,
இரண்டாவது பெண்ணுக்குப் பார்க்கலாமே என உறவுகாரர்கள் ஆலோசனை சொல்லாமல் இல்லை. பல பேர் கேட்டும்
வந்தார்கள். ஆனால் அப்படிச் செய்தால் ஜெயாவுக்குத்
திருமணம் ஆகாமலேயே போய்விடுமெனக் கூறி நாகு தாத்தா திடமாக மறுத்துவிட்டார். அத்தைகள்
யாரும் அதைப் பற்றி
கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அவர்கள் சந்தோஷமாகவே இருந்தார்கள். ஆறு
பெண்களும் அத்தனை ஒற்றுமை.
அதிலும் சந்திரா அத்தை
மென்மையின் முழு உருவம். கண்ணை
உறுத்தாத அழகு. அம்மா அவளின் நிறத்தைப் புது நிறம் என்பாள், சிவப்பும் இல்லாமல்,
மாநிறமும் இல்லாமல், அப்போது தான் வாடத்தொடங்கியிருக்கும் தாழம்பு போல ஒரு நிறம். என் நினைவுக்குத் தெரிந்தவரையில்
எப்பொழுதும் பாவாடை தாவணி தான் போட்டிருப்பாள்.
சுற்றி ஆறு வெள்ளை கற்களும் , நடுவில் சிவப்புக் கல்லுமாய்ப் பூ வடிவில்
இருக்கும் ஶீதேவி மூக்குத்தி அணிந்திருப்பாள். அவள் கொல்லையில் பூப் பறிக்கும் போது
சூரிய ஒளிப்பட்டு மூக்குத்தி மின்னும். வீட்டிலேயே அமைதி அவள் தான். அவள் குரல் அதிர்ந்து கேட்டதே இல்லை.
அவள் எதைத் தொட்டாலும் துலங்கும் என்று நாகு தாத்தா
சொல்லுவார். அவள் நட்டு வைத்த செடிகள் பூத்துக் குலுங்கின. எல்லாரிடமும் முரண்டு
பிடிக்கும் அந்த முரட்டுப் பசு பார்வதி கூடப் சந்திரா அத்தைப் பால் கறந்தால் பூனைக்குட்டி
போல் சாதுவாய் நிற்கும். அவள் எந்தக் காரியம் செய்தாலும் அதில் அழகு
மிளிரும்.
பக்கத்து வீடு தான் என்பதால், பள்ளி விடுமுறை
நாட்களிலெல்லாம் நான் அவளுடனே திரிவேன். வீட்டில் எல்லோரும் என்னைச் சந்திரா
அத்தையின் வால் என்றே அழைப்பார்கள் . அப்படி யாராவது கேலி செய்யும் பொழுதெல்லாம்
சந்திரா அத்தை என்னைத் தன்னோடு சேர்த்து இறுக்கக் கட்டிக் கொள்வாள். மதியம்
ஓய்வாக இருக்கும் போது கொல்லையில் இருந்த இலந்தை மரநிழலில் துணி விரித்து அமர்ந்து புத்தகம்
வாசிப்பாள். அவள் மடியில் தலைசாய்த்தப்படி நானும் வாசிப்பதுண்டு. அது
போன்ற மதியங்களில் சிலநேரம் மெல்லிய
குரலில் அத்தை பாடுவாள் . சில நாட்கள் கதை
சொல்வதும் உண்டு.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அது போன்ற ஒரு
பின்மதியத்தில் தான் சத்யன் மாமா அவர்கள்
வீட்டுக்கு முதன் முதலாக வந்தார். பக்கத்து ஊரில்
உறவுகாரர்களின் வீட்டில் ஏதோ திருமணம். நாகு தாத்தாவின் அம்மா விசாலம் பாட்டியைத்
துணைக்கு வைத்துவிட்டு இரு வீட்டுப்பெரியவர்களும் அங்கு சென்றிருந்தார்கள். சாயங்காலம் காப்பிக்கு வீடு திரும்பி விடுவதாகச்
சொல்லியிருந்தார்கள்.சந்திரா அத்தை முற்றத்துத் தூணில் சாய்ந்து மகிழம் பூக்களைக் கோர்த்துக்
கொண்டிருக்க, நான் அவளருகில் அமர்ந்தபடி என் சொப்பு சாமான்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.
மற்றவர்கள் எல்லோரும் உள்ளறையில் படம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். என் சொப்புகளில் இரண்டு மகிழம் மலர்களைப் போட்டுச்
சோறு, குழம்பு எனக் கிளறிக்கொண்டிருந்த போது வாசலில் நிழலாடியது.
அத்தை இங்கிருந்தப்படியே வாசலை எட்டிப் பார்த்து “யாரு?”
என்றாள். முதலில் குரல் மட்டும்தான் கேட்டது.
“நான் தான் சத்யன், நன்னிலம் ராஐத்தம்மா பையன், மெட்ராஸ்லேர்ந்து வர்றேன்“
என்று பதிலளித்தப்படி வாசற்படியில் நேராக வந்து நின்றவர் நல்ல உயரமாக, சிவப்பாக
இருந்தார்.
“வாங்க ! உள்ளே வாங்க!, நீங்க வருவீங்கன்னு
அப்பா சொன்னார்.”
என்று புதியவரை அத்தை வரவேற்றாள்.
“பானு, தண்ணீர் சொம்பை எடுத்துண்டு வா தங்கம்” என்று என்னை ஏவி
விட்டு, நாற்காலியை
இழுத்துப் போட்டாள்.
“நீங்க உக்காருங்க,
அப்பாவும்
அம்மாவும் மணல்மேட்டில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்காங்க, வர்ற நேரம்
தான் என்றவள் என்னிடம் இருந்து தண்ணீர் செம்பை வாங்கி அவரிடம் கொடுத்தாள்.
அத்தை அன்று பச்சையில் பாவாடை , ரவிக்கையும் சிவப்பு
தாவணியும் அணிந்திருந்தாள். பச்சையும் சிவப்புமாய்க் கையில் கண்ணாடி
வளையல்கள். தலையில் ஒரு இணுக்கு மனோரஞ்சித
மலர்களைச் சொருகியிருந்தாள். முற்றத்து வெயில் மூக்குத்தியில்
பட்டுத்
தெறித்து அவள் முகத்துக்கு இன்னும் ஒளியூட்டியது. கன்னகதுப்புகளிலும்
மூக்கு நுனியிலும் சிவப்பேறியிருந்தது. தண்ணீர்
குடித்து விட்டுச் செம்பை அத்தையிடம் கொடுக்கையில் சத்யன் மாமா கண்களில்
ஆர்வத்தோடு அத்தையைப் பார்ப்பதைக் கவனித்தேன், அதை அவரும் கவனித்து
என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். என்னைப் போலவே அவருக்கும் அத்தையை மிகவும்
பிடித்திருந்தது என்று தோன்றியது.
அத்தை உள்ளே போய்ப் பாட்டியையும் சிவாவையையும்
அழைத்து
வந்தாள். பின்னாடியே மற்றவர்களும் வந்தார்கள். பாட்டி, “ராஜத்து
பிள்ளையா நீ?” என்று கேட்டவள், “ஆமா, இங்கே என்ன,உத்யோகமா? என்று விசாரணையைத்
தொடங்கினாள்.. தாலுக்கா ஆபிசில் வேலை கிடைத்திருப்பதாகவும், இரண்டு நாட்களில்
பணியில் சேர வேண்டுமென்றும் சத்யன் மாமா கூறினார். அப்போதைக்கு பட்டமங்கலத் தெருவில் ஒரு
ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும், தங்க இடம் பார்க்க வேண்டுமெனவும் அவர்
பாட்டியிடம் கூறிக்கொண்டிருந்தபோது ஜெயா அத்தை காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.. பாட்டி
மாமாவிடம் அவரின் அம்மாவைப் பற்றியும் மற்ற உறவுகாரர்களைப் பற்றியும் கேள்வி மேல் கேள்விக்கேட்டு
விசாரிக்கத் தொடங்கினாள். மாமா எல்லாவற்றுக்கும் சிரித்தபடி பொறுமையாகப்
பதில்
சொன்னார்.
அவரைப்
பாட்டியின் கேள்விகளிலிருந்து காப்பாற்ற “வாங்கண்ணா கொல்லைப்பக்கம் போகலாம், நல்லா காத்து
வரும்” என்று சொல்லி சிவா அண்ணா அழைத்தான்.
“ டேய் சிவா,
அவன் உனக்கு
அண்ணா இல்லைடா, அத்தான் முறை வரும் . அத்தான்னு கூப்பிடு” என்றாள்
பாட்டி . அப்போது சத்யன் மாமாவின் கண்கள் சந்திரா அத்தையின் கண்களை ஒரு கணம் சந்தித்து விலகின.
சிறிது நேரத்தில் கல்யாணத்துக்குப் போன பட்டாளம் திரும்பிவர
மீண்டும் அறிமுகப்படலம்.
அதற்குபின் சத்யன் மாமா அங்கு அடிக்கடி வர ஆரம்பித்தார்.
என் அப்பா தான் அவருக்கு இரண்டு தெரு தள்ளி ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக்
கொடுத்தார். நல்ல பண்டங்கள் செய்தால்
அவருக்கும் ஒரு பங்கு சிவா அண்ணாவிடம் கொடுத்து விடப்பட்டது. விடுமுறை தினங்களில் அவர் நாகு தாத்தா
வீட்டிலேயே இருக்கத் தொடங்கினார். ஆனால் அடுத்த இரண்டு மாதங்களில் அப்பாவுக்குக் கும்பகோணத்துக்குப் பணிமாற்றம் ஏற்பட்டு அங்கு குடியேறினோம். இருந்தாலும் மாதமொரு முறை ஊருக்குச் சென்று
கொண்டிருந்தோம்.
முதல் மாதம் ஊருக்கு வந்த போது , அத்தையிடம் சின்ன
மாற்றம் தெரிந்தது. முகம் அலம்பிப் பொட்டு வைப்பதைத் தவிர வேறு அலங்காரங்கள்
செய்து கொள்ளாத அத்தைக் கண்களுக்கு மை தீட்டத்
தொடங்கி இருந்தாள். சத்யன் மாமா
வந்தால் அவள் கூடத்தில் அதிகம் நடமாடுவது போல் இருந்தது. சமையலறையில் அவள் பாடுவது
கூடத்தில் கேட்கத் தொடங்கியது. அத்தை ஒளியாலானவள் போல் நடமாடினாள். அவள் மலர்ச்சி
அந்தியில் பூக்கும் நித்யமல்லியின் மணம் போல் வீடெங்கும் பரவி இருந்தது. அந்த
வருடம் ஊர் திருவிழாவின் போது சத்யன்
மாமா கருநீலத்தில் அரைக்கை சட்டையும் வேட்டியுமாய் வந்த போது சினிமா நடிகர் போல்
இருந்தார். “மாமா ஹேண்ட்ஸம்மா இருக்காரு இல்ல அத்தை? நீங்களும் இவரை
மாதிரி அழகான மாமாவா பார்த்துக்
கல்யாணம் செஞ்சுகுங்க” என்று நான் சொன்னப்போது, அத்தைக் கன்னம் சிவக்க “பெரிய மனுஷியாட்டம் பேச்சப் பாரு” என்று என்னைக்
கடிந்து கொள்வது போல் சொன்னாலும் , அவள் வழக்கமாய்ச் செய்வது போல் இறுக்கி அணைத்து
என் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அன்று மதியம்
அனைவரும் உண்ட களைப்பில் உறங்க, நான் வழக்கம் போல் அத்தையைத் தேடிக்கொண்டு
இலந்தைமரத்தடிக்கு ஓடினேன். அங்கு அத்தையுடன் சத்யன் மாமாவும் இருந்தார். “உன்
வாலு வந்துவிட்டது” என்று கூறி என் தலையை மென்மையாகத் தட்டியவர், அக்காவைப் பார்த்துத்
தலையசைத்துவிட்டுக் கிளம்பினார். அன்று
அத்தை அதிகம் பேசவில்லை, மயக்கத்தில் இருப்பவளைப்போல் இருந்தாள் , எதையோ எண்ணி
அடிக்கடி சிரித்தவாறு இருந்தாள். எனக்கு ஏனோ அத்தையைப் பார்க்கக் கொஞ்சம் பயமாக
இருந்தது.
அந்த வருடத்துக்குப் பின் நாங்கள் ஊருக்குப் போவது படிப்படியாகக்
குறைந்தது. அடுத்த வருடமே அப்பா அண்ணாவின் படிப்பை உத்தேசித்துச் சென்னைக்கு
மாற்றல் வாங்கினார். அவனுக்கு மருத்துவர் ஆக வேண்டுமென விருப்பம். நான் புதுத்
தோழிகளுடன் சென்னை வாழ்க்கையில் ஒன்றத் தொடங்கினேன். இருந்தாலும் சந்திரா அத்தைத்
தான் என் ஃபேவரைட் என்று என் தோழிகள் எல்லோரிடமும் சொல்லி வைத்தேன்.
அப்போது தான் அந்தத் திருமணப் பத்திரிக்கை வந்தது.
சத்யன் மாமாவின் திருமண அழைப்பிதழ். அம்மா அதைப் பார்த்துவிட்டு,
“படுபாவி, எப்படித் தான் ஒரு பெண்ணோட மனச கலைச்சிட்டு இன்னொருத்தியைக்
கல்யாணம் பண்ணிக்கிறானோ? ஏன் அப்போ தெரியலையா, அவளுக்கு மூத்தவங்க
ரெண்டுபேர் இருக்காங்கன்னு”? என்று புலம்பினாள்.
“அம்மா சொன்னாள், ஆட்டுக்குட்டி சொன்னாள்னு யாரையோ கல்யாணம்
பண்ணிக்க எதுக்கு அப்பாவி பொண்ணோட மனசுல ஆசைய வளர்க்கணும்” என்றவள் , அப்பாவிடம் “இந்தக்
கல்யாணத்துக்கு நீங்க போக வேண்டாம்” என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாள் .
இரண்டு மாதங்களில்
நாங்கள் ஊருக்குப் போன போது அத்தை முற்றிலும் வேறொருத்தியாக மாறி
இருந்தாள். கசங்கிய உடைகளும், கலைந்த தலையுமாய்
முகத்தில் வழக்கமான மலர்ச்சி காணாமல் போயிருந்தது. யாரிடமும் பேசுவதில்லை.
சித்தபிரமை பிடித்தவள் போல் எப்போதும் வெறித்துப் பார்த்தபடி அந்த இலந்தை
மரநிழலில் கிடப்பாளாம். சரியாகச் சாப்பிடுவதில்லை. தோட்டம் பெருக்குவது, மாடுகளுக்குத்
தண்ணீர் வைப்பது எனச் சில வேலைகளை மட்டும் இயந்திரம் போல் செய்வாளாம். மற்றபடி
சாயங்காலமானால் சமையலறைக்கு அடுத்து இருந்த இரண்டாம் கட்டில்தான் வாசம் என மதுரம்
பாட்டி அம்மாவிடம் சொல்லிப் புலம்பினாள்.
அடுத்து நாங்கள் ஜெயா அத்தையின் திருமணத்துக்காகத் தான்
மீண்டும் ஊருக்குச் சென்றோம். சத்யனின் திருமணத்துக்குப் பிறகு நாகு தாத்தா தன் பெண்களுக்கு வெறிப்பிடித்தாற்போல்
மாப்பிள்ளை தேடத் தொடங்கினாராம்.
பக்கத்திலேயே கடுவன்குடியில் வசித்த ஒரு வசதி அதிகம் இல்லாத குடும்பத்தில் ஒரு பையன் இருப்பதாகத்
தெரிந்ததாம். இருந்தாலும் நல்ல குடும்பமெனத்
தெரிந்ததும், உடனே பேசி முடித்து விட்டாராம். திருமண விழாவில் சந்திரா அத்தை
கலகலப்பாக இல்லை. அதே வெறித்த பார்வை
தான். சகோதரிகள் அவளுக்குப் புடவை கட்டி அலங்காரம் செய்ய, அத்தைப் பொம்மை மாதிரி நின்று கொண்டிரு்ந்தாள்.
எனக்கு அத்தையை அப்படிப் பார்க்கவே பிடிக்கவே
இல்லை. இனி ஊருக்கு வரக்கூடாது என நான்
முடிவு செய்தேன். நாங்கள் ஊருக்குப்
போகும்போதெல்லாம் அண்ணா டியூஷன், சிறப்பு வகுப்புகள் எனப் பெரியம்மா வீட்டில் தங்குவதைப் போல்
நானும் சென்னையிலேயே இருந்து விட
ஆரம்பித்தேன். அடுத்தடுத்து எல்லா
அத்தைகளுக்கும் இரண்டே வருடத்தில் திருமணம் நடந்தது. இன்னும் நித்யா அத்தைத் தான்
பாக்கி. அவள் முதுகலை படிப்பு முடிந்தவுடன், அவளுக்கும் திருமணம் முடிக்கப்போவதாகப்
பேச்சு. சந்திராவுக்கு தான் கல்யாணம்,சீமந்தம்ன்னு என்று ஒரு நல்லதும் இல்லாமல் போனது என அம்மா தான் ஒவ்வொரு முறை ஊருக்குச்
சென்று திரும்பும் போதும் புலம்புவாள்.
அந்த வருடம் கோவில் திருவிழாவுக்கு அப்பாவும் அம்மாவும்
என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்றார்கள்.
அண்ணா கல்லூரியில் சேர்ந்து விட்டிருந்ததால் அவன் வரவில்லை. சந்திரா அத்தை
இளைத்திருந்தாள். சாப்பாடு கூட மதுரம் பாட்டி தான் ஊட்டி விட்டாள். எப்போதாவது அவளைப் பார்த்துச் சிரிப்பாளாம்,
மற்றபடி அவள் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. யாரையும் அவளுக்கு அடையாளம் தெரிந்ததாகத் தெரியவில்லை.
“போகாத கோயில்
இல்லை, பார்க்காத டாக்டர் இல்லை, எந்தப் பலனுமில்ல நான் மனச தேத்திகிட்டேன்,
அவர்தான் பாவம் ஒடஞ்சி போய்விட்டார்” என மதுரம் பாட்டி அம்மாவிடம்
சொல்லிக்கொண்டிருந்தாள். அப்போது அத்தை
நாங்கள் இருவரும் சேர்ந்து வரைந்த அவளுடைய
கோல நோட்டைக் கையில் வைத்துக்கொண்டு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்கு
என்னவோ அத்தைச் சீக்கிரம் சரியாகி விடுவாள் எனத் தோன்றியது.
அன்று
சாயங்காலம் அம்மன் புறப்பாடு. எல்லா
அத்தைகளும் தங்களின் கணவன்மார்களோடு வந்திருந்தார்கள். ஜெயா அத்தையின் மகளுக்கு
அப்பொழுது தான் ஒரு வயதாகி இருந்தது. பிரபா அத்தைக்கு நிறைமாதம். வீடெங்கும் ஆட்கள் நிறைந்திருக்க,
பழைய களை திரும்பி விட்டது போலத் தோன்றியது.
அம்மா சந்திரா அத்தைக்கு மெஜந்தா கலரில் பட்டு
சேலையுடுத்தி, தலைவாரி விட்டாள். நித்யா, அத்தைக்கு அலங்காரம் செய்து விட்டாள். ஓரளவுக்குப்
பழைய அத்தையைப் பார்த்தது போல் இருந்தது. அத்தைச் சமர்த்து குழந்தையாய் எல்லாவற்றுக்கும்
ஒத்துழைத்தாள். எல்லோருமாய் சேர்ந்து
கோவிலுக்குச் சென்றோம். சுவாமி தரிசனம் முடிந்து வெளியில் வரும்போது தான் சத்யன்
மாமாவை பார்த்தோம். கையில் இரண்டு வயது
மதிக்கத்தக்க மகனை தூக்கிக் கொண்டு மனைவியுடன் எதிரில் வந்தார். மனைவியின்
வயிறு மேடிட்டிருந்தது. அவர் திருமணமான கையோடு திருவாரூருக்கு மாற்றல் வாங்கி
சென்றுவிட்டதால், யாரும் அவரை அங்கு எதிர்பார்க்கவில்லை.
எங்களைப்
பார்த்ததும் லேசாக அதிர்ந்தவர்,
சமாளித்துக் கொண்டு மென்மையாகப் புன்னகைத்து தலையாட்டினார். அவருடைய பார்வையை
தவிர்த்து விட்டு அவசர அவசரமாக அனைவரும் அவர்களைக் கடந்தோம். கொடிமரத்துக்கு
முன் அப்பாவும் அம்மாவும் குனிந்து வணங்க, திடீரென அத்தை தரையில் விழுந்தாள்.
அவள் உடல்
வெட்டி வெட்டி இழுக்கத் தொடங்கியது. தலை இடதுபுறமாய் திரும்பியிருக்க, உடல் வலப்பக்கமாய் திரும்பி, கண்கள்
மேற்புறமாய் குத்திட்டு நிலைக்க, கையும்
கழுத்தும் யாரோ நூலைக் கட்டி இழுத்ததுப் போல் கோணிக்கொண்டன. கால்கள் தரையில்
கட்டுபாடின்றி அளைந்தன. பெண்கள் அலற ,
ஆண்கள் பதற, யாரோ சாவியை கையில் வைத்து அழுத்த ஒரே களேபரம். கொஞ்ச நேரத்தில் அத்தையின் வலிப்பு அடங்கியது. அதற்குள்
அத்தை மயக்கமாகி இருந்தாள். சற்று தூரத்தில்
சத்யன் மாமா அதிர்ந்து போய்
நின்று கொண்டிருப்பது நிழலாகத் தெரிந்தது.
அப்படியே அத்தையை தூக்கி போட்டுக்கொண்டு நாகு தாத்தாவும், பாட்டியும் மருத்துவமனைக்கு ஓடினார்கள். அப்பா தான் கார்
ஓட்டினார். அவர்கள் திரும்பி வந்தப்பொழுது அத்தை மிகவும் பலவீனமாக இருந்தாள். உடல்
முழுவதும் வியர்த்து சேலையெல்லாம்
நனைந்திருந்தது. நடக்க முடியாமல் சாய்ந்தவளைத் தாத்தாவும் பாட்டியும் தான் மெல்ல
தாங்கியபடி அழைத்து வந்து முற்றத்துக்கு அருகில்
தூணில் சாய்த்து அமரச் செய்தார்கள். தாத்தா ஆடி போயிருந்தார். எதுவும் பேசாமல் அவர் உடல்
லேசாக நடுங்கியபடி இருந்தது. அத்தைக்கு வெறும் அதிர்ச்சி தான் என்றும் உடல் கொஞ்சம்
தேறியவுடன் தஞ்சாவூருக்கு அழைத்துப் போய் சில டெஸ்ட்டுகள் எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் சொன்னதாகப் பாட்டி சொன்னாள்.
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் அம்மா ஹார்லிக்ஸ் கலந்து வந்து கொடுத்தாள்.
அவர்கள் அதை குடித்துக் கொண்டிருக்கும் போதே சந்திரா அத்தை திடீரென எழுந்து முற்றத்தில் இறங்கியவள், சேலையை வழித்துக்கொண்டு, குந்தி அமர்ந்து
அங்கேயே சிறுநீர் கழித்தாள்.
“அடி
சந்திரா! என்னடி பண்ற ?” என்று அலறிய பாட்டி டம்ளரை அப்படியே போட்டுவிட்டு, ஒடிப் போய் அவளை தூக்கி
நிறுத்தினாள், மற்றவர்கள் அனைவரும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார்கள்.
சந்திரா அத்தை
பாட்டியின் பிடியிலிருந்து முழு
பலத்துடன் திமிறி விடுவித்துக்கொண்டு, பாட்டியைக் கீழே தள்ளி விட்டாள். பாட்டி சுதாரித்து எழுவதற்குள் அத்தை அங்கேயே
மீண்டும் குத்துகாலிட்டு அமர்ந்தாள் . அவள் பார்வை எங்கோ சூன்யத்தை வெறித்தது. அத்தனை நேரம் தைரியமாய் இருந்தப் பாட்டி ,
“பாழாப் போச்சே!. எல்லாம் பாழாப் போச்சே!,”
“எப்படி இருந்த
குழந்த? இப்படி தட்டழிஞ்சு போயிட்டாளே, அய்யோ!என்
வீட்டு தெய்வம் இப்படி மண்ணுல
சரிஞ்சிடுச்சே” என கதறிக்கொண்டே மார்பில்
அடித்தபடி பெருங்குரலெடுத்து அழத்
தொடங்கினாள்.
மற்ற அத்தைகள் ,
அம்மா என அனைவரும் அழுது கொண்டே பாட்டியை சூழ்ந்துக் கொண்டார்கள் .அப்பா என்னை அணைத்துக்கொண்டார்.
சந்திரா அத்தை யாரையும் அருகில் வர விடவில்லை.அவளை
நெரு்ங்கினாலே சீறினாள். முற்றத்தில் கால் அலம்ப வைத்திருந்த வெங்கல சொம்பை தூக்கி
வீசினாள். ஆங்காரத்துடன் தண்ணீர் அண்டாவை சாய்த்தாள். யாரும் எதுவும் செய்ய
தோன்றாமல் செயலற்று நின்று கொண்டிருந்தோம்.
அத்தை எங்களை விட்டு வெகு தூரம்,
சென்றுவிட்டாள் என்று எனக்குத் தோன்றியது. நாங்கள் யாரும் அடையமுடியாத தொலைவுக்கு
சென்றவள் பிறகு திரும்பவே இல்லை.
அந்த நிகழ்ச்சிக்குப் பின் அத்தை ரொம்ப மூர்க்கமாக
மாறினாள் என்றும், மற்றவர்களை தாக்குவதோடு இல்லாமல் , அடிக்கடி தானும் கத்தியால்
கைகளை கீறிக்கொண்டாள் என்றும் ஊரிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அவளை வீட்டில் வைத்துப் பார்த்து கொள்வது கஷ்டம்
என்று டாக்டர் சொல்லிவிட்டதால். தஞ்சாவூரில் இருந்த ஒரு மனநலக் காப்பகத்தில்
சேர்த்தார்கள். தாத்தாவும் பாட்டியும்
மட்டும் அவளை மாதமொரு சென்று பார்த்து வருவார்கள்.
அந்த நிகழ்ச்சிக்குப் பின் நான் ஊர்பக்கம் போகவே இல்லை.
படிப்பு,வேலை திருமணம் என வாழ்க்கை வேறு திசையில் கூட்டிச் செல்ல சந்திரா அத்தை
என் நினைவுகளில் தேயத்தொடங்கினாள். இதெல்லாம் நடந்து இருபத்தைந்து வருடங்களுக்கு
மேல் ஆகி விட்டது. தாத்தா பாட்டியின் மறைவுக்குப் பின் ஜெயா அத்தை வீட்டில் சந்திரா அத்தைக்கு பொறுப்பேற்றுக் கொண்டாள்.
பாட்டி உடல்நலமில்லாமல் இருந்தபோதே அவளைப் பார்த்து கொள்வதற்காக அவள் தன் குடும்பத்தாருடன் பிறந்த வீட்டுக்கு
வந்துவிட்டாள். அக்காவின் கணவர் தான் தாத்தாவின் மளிகை கடையை கவனித்துக் கொண்டார்.
அத்தை சற்று
தெளிவுடன் இருந்தால் சிலகாலம் வீட்டுக்கு அழைத்து வருவதும், பிறகு மனநலம் மோசமாகும் போது காப்பகத்தில்
விடுவதுமாய் இருந்தார்கள். வீட்டு விசேஷங்களுக்கு அவளை அழைத்து வரும்
போதெல்லாம் அவள் நிலைமை மோசமானது. அதனால் பண்டிகை நாட்களில் கூட அவளை அழைத்துச்
செல்ல வேண்டாமென அந்த மனநல விடுதியில் சொல்லி விட்டார்கள். இன்றைக்கெல்லாம் அத்தைக்கு அதிகபட்சம்
ஐம்பத்தைந்து வயது தான் இருக்கும் . அதற்குள் எத்தனை அல்லாட்டம், எத்தனை துயரம்.
சென்ற வருடம் ஊர் திருவிழாவுக்கு சென்ற வந்த அம்மா , “,சந்திரா வீட்டுக்கு வந்துட்டாடி பானு ,
இப்போ கொஞ்சம் தெளிஞ்சிருக்கா தெரியுமா?” என்றாள். “நான் பக்கத்துல போய் எப்படி இருக்க
சந்திரான்னு கேட்டதும் என் கையை பிடிச்சுகிட்டா” என்று ஆசையாகச் சொன்னாள். உடம்பு கூட தேறியிருக்கிறது,
இனி அந்த காப்பகத்துக்கு போக வேண்டியிருக்காது என்றும் நம்பிக்கையுடன் அம்மா
சொன்னாளே? இப்போது என்ன ஆகியிருக்கும், அத்தைக்கு என்ன சாகும் வயதா? எங்கெங்கோ எண்ணம் ஓட, என்னை அறியமாலே
உறங்கி விட்டேன். கண்விழித்த போது ஊர் வந்துவிட்டது. பத்து நிமிடத்தில் வீட்டுக்கு
போய்விடலாம் என்றான் ரகு.
அத்தையை கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். சிவப்பு சேலை
அணிவித்து பெரிய பொட்டிட்டு, கைகளில்
கண்ணாடி வளையல் மாட்டி அவளின் சகோதரிகள் அவளை பார்த்து பார்த்து அலங்கரித்திருந்தார்கள்.
எனக்கு ஏனோ அழுகை வரவில்லை. அத்தையைப்
பார்த்துகொண்டே இருக்கவேண்டும் போல் இருந்தது அத்தைக்கு அருகில் அமர்ந்து கொண்டு,
அவள் கைகளை வருடினேன். அத்தையின் கை
சில்லிட்டு, பாறையைப் போல இறுகி இருந்தது.
“இந்த கையால் எத்தனை நாள் என் தலையை கோதிவிட்டிருக்கிறாள், மெத்தென்று பூவால் வருடியதுப் போல் இருக்கும்
அவள் தொடுகை, நினைக்க நினைக்க துக்கம் நெஞ்சை அழுத்தியது. அத்தை ,அத்தை என மனசு அரற்றிக் கொண்டே இருந்தது. “இப்படி இறுக்கமா இருக்காதடி ,அழுதுடு” என
அம்மா காதருகில் கிசுகிசுத்தாள்.
விடிந்ததும் காரியங்கள்
மளமளவென நடந்தன. அத்தையை வழியனுப்பி விட்டு இதோ கூடத்தை அலம்பித் தள்ளியாகி
விட்டது. நினைவுகளையும் கூட இப்படி அடித்து நீர் ஊற்றி அலம்பி விடமுடிந்தால்
நன்றாக இருக்கும்.
“நல்லா தெளிவா
தான் இருந்தா, காரியமெல்லாம் கூட செய்ய
ஆரம்பிச்சா. இத்தனை வருஷம் கழிச்சு அந்த சனியன் பிடிச்ச வலிப்பு எங்கேர்ந்து தான் அவளுக்கு எமனாய் வந்துதோ” என ஜெயா அத்தை
கூடத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். நான் மெல்ல அவர்களைத்
தாண்டிப் போய் கொல்லையில் இலந்தை மரத்தடியில் போய் உட்கார்ந்தேன். இத்தனை
வருடங்கள் கடந்தும் அந்த மரம் காலத்தின் பேருருவாய்
கிளை பரப்பி நின்று கொண்டிருந்தது.
இப்பொழுது அங்கு
ஒரு சிமெண்ட் மேடை போடப்பட்டு இருந்தது. நான்
அதை பார்த்து கொண்டிருக்கும் போது, “அம்மா தான் அப்பா கிட்ட சொல்லி அந்த மேடையை
அங்க கட்டச் சொன்னா” என்று சொல்லியபடி
ஜெயா அத்தையின் மகள் பிரதீபா அங்கு
வந்தாள். நான் அவளைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தேன். என்னருகில்
வந்து அமர்ந்த பிரதீபா, “நீங்க பானு அக்கா
தானே “எனக் கேட்டாள். ஆமாம் என்று தலையசைத்தேன். “ நான் உங்களை போட்டோஸ்ல பாத்திருக்கேன்
, சந்திரா சித்தி மடியில இருப்பீங்க”
என்று தொடர்ந்து சொன்னவள், எனக்கும் சித்திய ரொம்ப பிடிக்கும் என்றாள். நான்
எதுவும் சொல்லாமல் அவள் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டேன். பிரதீபா
தொடர்ந்து பேசினாள். அவள் பேசியதின் சாரம் இது தான்.
சாயங்காலம் சற்று காற்றாட நிற்கலாமென்று சந்திரா அத்தையை
அழைத்துக்கொண்டு பிரதீபா மொட்டைமாடிக்குச் சென்றிருக்கிறாள். அத்தையின் கைகளைப் பிடித்தபடி இருவரும் தெருவை வேடிக்கை பார்த்தப்படி நின்று
கொண்டிருக்கையில் முக்கு வீட்டுக்கு ஒரு கார் வந்துள்ளது. அங்கு தாலுக்கா அலுவலகத்தில் தலைமை கணக்காளராக
இருந்து ஓய்வுப்பெற்ற அதிகாரி ஒருவர் புதிதாக வீடு வாங்கி குடி வந்திருக்கிறார். அவருக்கு திருமண
அழைப்பிதழை கொடுக்கத்தான் அந்த விருந்தாளிகள் வந்து இருக்கிறார்கள். அந்த
காரிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்ததும் தான் அத்தை இவள் பிடியிலிருந்து கைகளை உருவிக்கொண்டிருக்கிறாள்.
நடப்பதை
புரிந்துக்கொண்டு இவள் சுதாரிப்பதற்குள் அத்தை வலிப்பு வந்து தரையில்
விழுந்திருக்கிறாள். விழுந்த வேகத்தில் பின் மண்டை தரையில் மோதி பலமாய்
அடிப்பட்டிருக்கிறது. ஒரே ரத்தம். மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிர்
பிரிந்திருக்கிறது.
“நேத்திக்கு மொத முறையா சித்தி என்னை பேர் சொல்லி கூப்பிட்டா.
ஆனா பிரதீபான்னு இல்ல, பானுன்னு” என பிரதீபா சொல்லி முடிக்கவும், நான் உடைந்து
அழத்தொடங்கினேன்.
Comments
Post a Comment