ஓலி





ஒலி


பவானிக்கு தலை வலித்தது. மதியம் புருவங்களுக்கு மேல் சிறு முணுமுணுப்பாக தொடங்கிய வலி, இப்பொழுது நெற்றி , பின் மண்டை, கழுத்து எனப் பரவி தலை வெடித்து விடுமோ என்னும் அளவுக்கு வலித்தது. அவளுக்கு அமைதியாய் சற்று நேரம் எங்காவது அமர மாட்டோமா என இருந்தது. வீட்டுக்குப் போய் ஒரு காப்பியைப் போட்டு குடித்துவிட்டு சற்று நேரம் கதவை அடைத்துக் கொண்டு அவளது அறைக்குள் முடங்க வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல.


பவானி சத்தத்தை வெறுத்தாள். இரைச்சலும் நெரிசலும் நிறைந்த நகர வாழ்க்கை, ஆசிரியப் பணி வேறு. நாற்பது நிமிடங்களுக்கு ஒருமுறை ஒலிக்கும் பள்ளி மணி, மிஸ் மிஸ் என்று காலைச் சுற்றி சுற்றி வந்து கேள்விகளால் துளைக்கும் எதிர்கால இந்தியா, ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் பி.டி. மாஸ்டரின் விசில் என அவளைச் சுற்றி எப்பொழுதும் சத்தம். வீட்டைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அம்மா காலை ஐந்து மணிக்குத் தொடங்கினாள் என்றால் இரவு பன்னிரண்டு வரை கூட விடாமல் டி.வி பார்ப்பாள். அன்றைய ராசிப்பலனில் தொடங்கி சேனல்களை மாத்தி மாத்தி சீரியல் பெண்கள் விதவிதமாகப் போராடுவதை , தியாகங்கள் செய்வதை வில்லத்தனங்கள் புரிவதை பார்த்தபடி இருப்பாள். அம்மாவுக்கு டி.வி எனில் அப்பாவுக்கு யூ டியூப் . ஜோதிடம், வானசாஸ்திரம், அமெரிக்கப் பொருளாதாரம், இலுமினாட்டிகள் சதி என யார் எதைப் பேசினாலும் விடாமல் கேட்பார். “ஹட்போன்ஸ் போட்டுக் கொண்டு கேளுப்பா” என்று ஆயிரம் முறை சொல்லியாகி விட்டது. ஆனால் அதை ஊருக்கே கேட்பதைப் போல் உரக்க வைத்துக் கொண்டு கேட்பதில் அவருக்கு அலாதி ஆனந்தம்.


பவானிக்கு ஒரே மகன். ஹரி. எட்டு வயது. வாய் பேச வராது. படிப்பும் வரவில்லை . ஆட்டிச குறைபாடு என்கிறார் டாக்டர். அவன் உலகமே வேறு. இந்த உலகத்தில் உள்ள யாரும், எதுவும் அவனுக்கு பொருட்டல்ல . நாள் முழுவதும் தன் பொம்மை கார்களை வரிசையாக அடுக்கி வைத்து விளையாடிக் கொண்டிருப்பான். அவன் உடல் தலையைத் தொட்டால் முன்னும் பின்னும் சாய்ந்தாடும் ரோலி போலி பொம்மையைப் போல் ஆடிக்கொண்டே இருக்கும் . கூடவே தேனீயின் ரீங்காரம் போல ம்ம்ம்ம்.. என்ற ஒலியும் எழுப்பியபடி இருப்பான்.


மருத்துவரிடம் கேட்டபொழுது ஆட்டிச குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு புலன்கள் அதிக கூர்மையாக இருக்குமென்றும் , அவர்களால் ஒளி, ஒலி, வாசனை , ஸ்பரிசம் எதையும் தனித்தனியாக வடிகட்ட முடியாது என்றும் கூறினார் . பெருநகரத்தின் பரபரப்பான சாலையின் நடுவே மாட்டிக்கொண்ட ஒரு நாய்க்குட்டியைப் போல தான், இந்த உலகம் அவர்களுக்கு எப்போதும் குழப்பமும் அச்சமும் தருவதாகவே இருக்குமெனவும் கூறினார் . ஒவ்வொரு ஆட்டிச குழந்தையும் தன்னை சமநிலைப்படுத்திக் கொள்ள

தானாகவே சில அசைவுகளை , பழக்கங்களை கற்றுக் கொள்கிறார்கள். சில பிள்ளைகள் கைகளால் தங்கள் உடலைத்

தட்டிக் கொண்டே இருப்பார்கள். சிலர் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை குலவையிடுவதுப் போல் வினோதமான ஒலியெழுப்புவார்கள். ஹரிக்கு இந்த ஆட்டமும் , ரீங்காரமும் .

கைகுழந்தையாக இருக்கையில் ஹரி அழுதுகொண்டே இருப்பான். இரவெல்லாம் தூங்காமல் சதா அலறல் தான். என்ன செய்தும் அவன் அழுகையை நிறுத்த முடியாது. மூன்று வயதுக்குப் பிறகு இ்ந்த ரீங்கார ஒலியை எழுப்பத் தொடங்கினான். ஆட்டமும் அப்போது தொடங்கியது தான். அதற்குப்பின் அவன் அழுகை படிப்படியாக குறைந்து இப்பொழுது முற்றிலும் நின்றுவிட்டது. ஓயாத அந்த ரீங்காரம் பவானிக்கு பழகி விட்டது. அவன் செல்லும் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் யாரும் பெரிதாக குறை சொல்லுவதில்லை. பொது பேருந்திலோ , ரயிலிலோ செல்லும் போதுதான் சிரமம். நிறைய முகச்சுளிப்புகளை சந்திக்க நேரிடும் . சிலர் வெளிப்படையாகவே திட்டியதும் உண்டு. ஆனால் பவானி எதையும் பொருட்படுத்தவே மாட்டாள். எப்பொழுதும் தணிந்து போவாள். ஹரியைப் போன்ற குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அனுசரித்து தான் நடக்க வேண்டும். மான ரோஷம் பார்த்தால் முடியுமா.


ஒருவழியாய் பள்ளி நேரம் முடிய , பவானி பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாக நடந்தாள். அங்கேயும் கூட்டம் தான். சித்திரை வெயில் சுட்டெரித்தது. இப்பொழுது தலை விண் விண்ணென்று தெறிக்கத் தொடங்கி விட்டது. லாரி ஹாரன்கள் ஓலமிட்டன. . பக்கத்து டீக்கடையில் ஜிங்குச்சா பாட்டு உச்சஸ்தாயியில் அலறியது. இத்தனை சத்தத்துக்கு நடுவில் ஒரு பூக்கடைக்கார அம்மா யாரிடமோ கைப்பேசியில் உரக்க சண்டைப் போட்டு கொண்டிருந்தாள். இதில் சைரன் சூழல ஓரு அவசர சிகிச்சை வாகனம் வேறு.

அய்யோ ! இந்த உலகம் ஏன் இன்று இத்தனை இரைச்சலாக இருக்கிறது? இவ்வளவு சத்தத்துக்கு நடுவிலா நாம் அன்றாடம் வாழ்ந்துக் கொண்டிருக்குக்கிறோமென பவானிக்குத் தோன்றியது. ”தாயே! பகவதி! சீக்கிரம் பஸ்சை அனுப்பி வை அம்மா” என்று வேண்டிக்கொண்டாள். பெரிய வேண்டுதல்களையெல்லாம் காதில் போட்டு கொள்ளாத அம்மன் நல்ல வேளையாக இதற்கு உடனடியாக செவி சாய்த்தாள் . ஒருவழியாய் பேருந்து வந்து விட்டது. நாலைந்து நிறுத்தங்கள் தான். இருபது நிமிடத்தில் வீட்டுக்குப் போய்விடலாமென பவானி நிம்மதியாக இருக்கையில் அமர்ந்தாள். பக்கத்து இருக்கையில் இருந்தவர் யூடியூப்பில் கிராமத்து உணவு என்ற சேனலை உரக்க வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பவானி கண்களை இறுக்க மூடி அந்த சத்தத்தை தவிர்க்க முயற்சி செய்தாள். காதை மூடிக்கொள்வது நாகரீகம் கிடையாதே.



வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் காபி கலந்து கொடுத்து விட்டு, தானும் குடித்தாள். ஒரு சாரிடான் மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு ஹரியை மடியில் உட்கார வைத்து வாயில் பாலை ஊற்றி குடிக்கச் செய்தாள். சிறிது நேரம் படுக்கலாமென்றால் மணி ஆகிவிட்டது, அப்பாவுக்கு ஏழு மணிக்குள் இரவு உணவை கொடுக்க வேண்டும் . சாப்பிட்டுவிட்டு ஒரு முக்கால் மணிநேரம் வீட்டைச் சுற்றி காம்பவுண்ட் உள்ளேயே நடப்பார். அப்பொழுது தான் அவருக்கு தூக்கம் வரும் . இல்லையென்றால் இரவெல்லாம் நெஞ்செரிச்சலால் அவதிப்படுவார்.


இரவு சாப்பாட்டுக்கு இட்லி வார்த்து சாம்பார் செய்யலாமென பவானி முடிவெடுத்தாள்.

அம்மா வழக்கம் போல் கூடத்தில் டி. வி. பார்த்து கொண்டிருந்தாள். அவளை சமைக்க சொல்ல முடியாது. அவளுக்கு பாக்கியலட்சுமியின் மகன் செழியனுக்கு இன்றைக்காவது விடுதலை கிடைக்குமா என தெரிந்துக் கொள்ள வேண்டும். பாவம், அந்த பாக்கியா, எவ்வளவு கஷ்டங்கள் அவளுக்கு என்று அம்மாவுக்கு ஒரே வருத்தம். பவானியின் கஷ்டத்தையெல்லாம் கவனிக்க அவளுக்கு நேரமில்லை. கொஞ்ச நேரம் அம்மாவை தொலைக் காட்சியை அணைக்க சொல்ல வேண்டும் என பவானி நினைத்தாள். ஆனால் அவள் தன் வீட்டில் இருந்தால் நினைத்த நேரம் நினைத்த நிகழ்ச்சியைப் பார்ப்பாள். ஹரியைப் பார்த்து கொள்ள ஒத்தாசையாக தான் இங்கு இருக்கிறாள். அவளை எதுவும் சொல்ல முடியாது. அப்பா யூடியூபில் சனிப்பெயர்ச்சி பலன்களை கேட்டுக் கொண்டிருந்தார். அவரையும் எதுவும் சொல்ல முடியாது. ஒரு பெண் கணவரின் துணை இன்றி அடுத்தவரை அண்டி இருக்கையில் யாரையும் எதுவும் சொல்ல முடியாது.


ஹரி வழக்கம் போல் தன் கார் பொம்மைகளை நீண்ட வரிசையில் நிற்க வைத்து உய்யங்ங்… என்று ஒலியெழுப்பியபடி விளையாடிக்கொண்டிருந்தான்.

பவானி குக்கரில் பருப்பை களைந்து வைத்துவிட்டு , சாம்பாருக்கு வெங்காயம் அரியத் தொடங்கினாள். தலைவலி இன்னும் குறைந்தபாடில்லை. குக்கரின் விசில் சத்தம் வேறு காதை கிழித்தது. வாணலியில் பருப்பை வைத்தால் லேசில் குழையாது. கேஸ் செலவு வேற. பவானி பல்லை கடித்தபடி காய்களை நறுக்கினாள்.



அப்பொழுது அம்மா கூடத்தில் ஹரியிடம் உள்ளே சென்று விளையாடும்படி கூறுவது கேட்டது. அவனின் ரீங்காரச் சத்தத்தில் அவளால் சீரியல் வசனத்தை சரியாய் கேட்கமுடியவில்லை. ஹரி தன் கார் பொம்மைகளை தூக்கி கொண்டு அடுக்களைக்குள் வந்தான். மீண்டும் தன் கார்களை சீராக சமையலறை தரையில் அடுக்கத் தொடங்கினான். அவனின் ரீங்காரம் அந்த குட்டி சமையலறைச் சுவரில் மோதி அறையெங்கும் வியாபிக்கத் தொடங்கியது. காதருகில் கொசு மொய்ப்பது போல உய்ய்ங்ங்…. என்ற சத்தம். பவானிக்கு அய்யோவென அலற வேண்டும் போல இருந்தது. கத்தியை கீழே வைத்துவிட்டு காதைப் பொத்திக்கொண்டாள்

அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. ஒரு பத்து நிமிடம் தன் காது செவிடாகி விட கூடாதா என்று அவளுக்குத் தோன்றியது. பொறுக்க மாட்டாமல் “அவரைப்போல எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு நாளாவது எங்கேயாவது ஓழிஞ்சு போயிடணும் , இந்த கொய்யங்ங் சத்தம் இல்லாத இடத்துக்கு” என்று வாய்விட்டுச் சொன்னாள். அவள் யாரிடம் சொல்ல முடியும் . தனக்குத் தானே பேசிக்கொண்டாள். திடீரென ஏதோ உறுத்த ஒரு நிமிடம் ஹரியைத் திரும்பிப் பார்த்தாள். அவன் கையில் இருந்த கார் பொம்மையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.அவனுக்கு எதுவும் புரியாது . பரப்பிரம்மம் .

பவானி மூச்சை மெல்ல இழுத்துவிட்டாள். தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்து சமையல் வேலையில் ஈடுப்பட்டாள். ஒரு ஈடு இட்லி வார்த்து அப்பாவுக்கு தட்டில் போட்டு கொடுத்தபின் தான் கவனித்தாள், ஹரி அடுக்களையில் இல்லை. கொஞ்ச நேரமாகவே அவன் ரீங்காரச் சத்தம் இல்லாமல் இருந்ததை அப்பொழுது தான் பவானி உணர்ந்தாள். தலைவலி போன இடம் தெரியவில்லை.

அவசரமாக கூடத்துக்குச் சென்றுப் பார்த்தாள். அங்கேயும் இல்லை. அம்மா, ஹரி எங்கே ? என்று கேட்டாள். “உன்கூட அடுக்களையில் தானே இருந்தான் “என்றாள் அம்மா. பவானி பரபரவென ஓடிச்சென்று வீடு முழுவதும் அவனைத் தேடினாள். குழந்தையைக் காணவில்லை. அடிவயிற்றில் குளிர்பரவ, போட்டிருந்த நைட்டியோடு தெருவில் இறங்கி , ஹரி,ஹரி என உரக்க அழைத்தபடி ஓடினாள். எதிர்ப்பட்ட தெருக்காரர்களிடம் எல்லாம் என் பிள்ளைய பார்த்தீங்களா எனப் பதறியபடி கேட்டாள். யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

“குழந்தை எங்க போயிருப்பான், நான் பேசினது அவனுக்கு புரிஞ்சிருக்குமோ, தவித்துப் போனாள் பவானி..” தாயே மீனாட்சி! என் புள்ளைய என்கிட்ட கொண்டு சேர்த்துவிடு தாயே! உனக்கு பாலாபிஷேகம் பண்றேன் என நெஞ்சுருக வேண்டிக்கொண்டாள்.. ஒரு வழியாய் அடுத்த தெருவில் இருந்த பெட்டிக்கடைக் காரர் , பூங்கா அருகில் அவனைப் பார்த்ததாகச் சொல்ல பவானி பதறியடித்துக் கொண்டு பார்க்குக்கு ஓடினாள். அவள் அடிக்கடி ஹரியை இந்தப் பார்க்குக்கு அழைத்து வருவது வழக்கம் தான். பூங்காவின் பின்பக்கம் ஒரு பெரிய மஞ்சனத்தி மரம் இருக்கும் , அது ஹரிக்கு மிகவும் பிடித்த இடம். அந்த மரத்தடியில் அமர்ந்து, மரத்தின் உச்சியை அண்ணாந்து பார்த்தபடி இருப்பான். பவானி நேராக அங்கே ஓடினாள்.


எதிர்பார்த்தபடி அவன் அங்கே தான் இருந்தான். உடல் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருக்க உச்சி முழுவதும் மஞ்சள் மலர்களால் நிறைந்திருந்த மரத்தைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். ஹரீ ! என்று அலறியபடி அவனருகே சென்றவள் “எங்கடா போன?, ஏன்டா தனியா இங்க வந்த” என்று கேட்டபடி அவனை கட்டிப்பிடித்து அவனின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள். “வா! வீட்டுக்குப் போகலாம்”, என்று சொல்லி மகனின் கையை பிடித்து வீட்டுக்கழைத்து வந்தாள்.


குளிக்க வைத்து உடைமாற்றி அவனுக்கு இட்லி ஊட்டி விட்டாள். ஹரி அத்தனை சிசுருக்ஷையும் அமைதியாக ஏற்றுக்கொண்டான். அவன் வாயிலிருந்து அந்த ரீங்காரச் சத்தம் எழவே இல்லை. பவானிக்கு வருத்தமாக இருந்தது. இந்த சத்தம் அவனுக்கு மிகவும் அவசியம் என்று டாக்டர் சொன்னாரே, குழந்தை சிரமப்படுவானே என்று அவளுக்கு வேதனையாக இருந்தது. ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று தன்னையே நொந்துக்கொண்டாள். குற்ற உணர்ச்சியோ என்னவோ அம்மா அடுக்களை வேலையைப் பார்த்துக்கொள்ள அவள் மகனை தூங்க வைத்தாள். ஹரி தூங்கும் வரையிலும் கூட அந்த சத்தத்தை எழுப்பவே இல்லை . பவானிக்கு ஏனோ தூக்கமே வரவில்லை. எதையோ இழந்தாற்போல் துக்கமாக இருந்தது. தூங்கும் மகனைப் பார்த்தபடி வெகுநேரம் விழித்திருந்தாள். எப்போது தூங்கினாள் என அவளுக்கே தெரியவில்லை.


காலையில் உறக்கம் கலைந்து அவள் கண்விழித்தப்பொழுது நல்ல வெளிச்சம் வந்துவிட்டது. அனிச்சையாக கை ஹரியைத் தேடியது. பக்கத்தில் படுத்திருந்த ஹரியை காணவில்லை. அவள் பதற்றத்துடன் எழுந்து கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தப்பொழுது ஹரி தரையில் அமர்ந்தபடி தன் கார் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான். அவன் வாயிலிருந்து மெலிதாக ம்ம்ம்…. என்ற ரீங்காரச் சத்தம் வந்தது. பவானி புன்னகையுடன் இறங்கிச் சென்று , தன் மகனை இறுக்க கட்டிக் கொண்டாள். அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
 


Comments