விஷயம் என்னவென்றால்- எலன் பாஸ்

 விஷயம் என்னவென்றால்

— எலன் பாஸ்
வாழ்க்கையை நேசிப்பது,
அதை தின்று செரிப்பதற்கான வயிறு உங்களுக்கில்லாத நேரத்திலும்,
வாழ்க்கையை நேசிப்பது
நீங்கள் விருப்பத்துடன் பற்றியிருந்த அனைத்தும்
எரிந்த காகிதமாய் உங்கள் கரங்களில்
நொறுங்கிச் சிதறும்போதும்,
அதன் வண்டல் உங்களது தொண்டையை
நிரப்பிய போதும்
துயரம் உங்களுக்கருகே அமரும்போதும்
அதன் வெப்பச்சூட்டில் அடர்த்தியாகும் காற்று,
நுரையீரல்களை விட செவுள்களுக்கு ஏற்றதாகத் தோன்றும் அளவுக்கு
நீரைப் போல கனக்கும் போதும்
துக்கம் உங்கள் சொந்த சதையைப்போல
ஆனால் அதைவிடவும் கூடுதலாக ,
துயரத்தின் பருமன் உங்களை அழுத்தும் போதும்
'ஒரு உடலால் இதை எப்படி தாங்க முடியும்?'
என்று நீங்கள் எண்ணக்கூடும் .
அப்போது, ஒரு முகத்தை
உள்ளங்கைகளில் ஏந்துவதுபோல்,
வாழ்க்கையை நீங்கள் ஏந்திக்கொள்ள வேண்டும்
அது ஒரு சாதாரண முகம்.
வசியம் செய்யும் புன்னகையில்லை
ஊதாநிறக் கண்களில்லை
பிறகு, நீங்கள் சொல்ல வேண்டும்
'ஆம். உன்னை நான் ஏற்றுக்கொள்வேன் .
உன்னை நான் நேசிப்பேன்,மீண்டும் ’

Comments