பாற்கட்டு
பாற்கட்டு
“தம்பிக்கு
பெங்களுரில் வேலை கிடைச்சிருக்கு. இந்த வாரம் அங்க போய் வீடு
பார்க்க போறான்”.
“நம்ம ராஜேஷ்
இல்ல, அவனுக்கு டைவர்ஸ் ஆகிடுச்சாம்”.
அம்மா போனில் ஏதேதோ
சொல்லிக்கொண்டிருந்தாள். அனுவால் அதற்கு மேல் அ எதுவும் புத்தியில் உறைக்கவில்லை. மனது மரத்து போயிருந்தது. “அப்புறம் பேசறன்மா” என்று சொல்லி விட்டு போனை
வைத்தவளின் மனம் வேகமாய்
கணக்கு போட்டது.
இன்றோடு சரியாய் ஆறு
மாதங்களும், பன்னிரெண்டு நாட்களும் ஆகின்றன. இந்த இருபது
வருடத் திருமண வாழ்க்கையில் இதுதான் மிக நீண்ட இடைவெளி.
அவர்களின் இல்லறம் எப்போதும்
ஒன்றும் பூத்துக் குலுங்கவில்லையெனினும் இப்படித் தொடர்ச்சியாக இத்தனை
காலம் ரகு தள்ளியிருந்தது கிடையாது.
அவ்வளவு அழகற்றா போய்விட்டேன்? படுக்கையை
விட்டெழுந்து அனு தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.
அவளை எதிர்நோக்கிய முகம்
வெளுத்திருந்தது.
மூக்கு நுனி, கன்னக் கதுப்பு, காது மடல் என அங்கங்கே லேசான சிவப்புத்தீற்றல் . முன் நெற்றியில் கோடுகள்
அவித்த மரவள்ளிக் கிழங்கின் மேலிருக்கும் கோடுகளை நினைவூட்டின. உதடுகள் லேசாக
உலர்ந்து போயிருந்தன. எப்போதும் சிரித்துக் கொண்டேயிருப்பவள், இப்போதெல்லாம்
சிரிப்பதே அரிதாகிவிட்டது.
சிரிப்பது மட்டுமா? வெளியே நாலு
இடங்களுக்குப் போவது வருவது, நண்பர்கள் வீட்டு விசேஷங்களில்
கலந்து கொள்வதென எல்லாமே குறைந்துவிட்டது. அம்மா,
ரதி இவர்களைத் தவிர வேறு யாரிடமும் பேசுவதே இல்லை. தன்னிடம்
ஏதோ குறையிருப்பது போல தோன்றும் உணர்வை அவளால் தவிர்க்கவவே
இயலவில்லை.
கண்ணாடியில் அவளை வெறித்த
அந்தச் சோகையான முகத்தை அவளால் அதற்கு மேல் பார்க்க முடியவில்லை. அவளாலேயே சிறிது
நேரம் பார்க்க முடியாத முகத்தை ரகு மட்டும் எப்படி பார்க்க முடியும் என்று எண்ணிக்
கொண்டபடி அனு பெருமூச்செறிந்தாள் .
அனு பேரழகு என்று சொல்ல
முடியாவிட்டாலும் திருத்தமாக இருப்பாள்.
மாநிறத்துக்கும் சற்றுக் கூடுதலான நிறம். மாலையில் பூக்கும்
நித்யமல்லியைப் போல் லேசாய் மஞ்சளிழைத்த வெண்மை
. கொஞ்சமாய் பருத்த மேலுதட்டின்கீழ் சற்று குறுகிய சிமிழைப்போன்ற
கீழுதடுகள் சிரிக்கும்போது ஓவியத்தில் வரைந்து வைத்தது
போல் அழகாய் விரியும். வனைந்தாற் போன்ற நீண்ட அழகிய கழுத்து,
அதன் வளைவும் வரிகளும் மண் குடுவையை நினைவுபடுத்தும் .
கண்ணாடியில்
, உடுத்தியிருந்த நைட்டியின் விளிம்புகளை மீறி விம்மிய சதைகள் அவள் கண்ணில்பட்டன. மத்திம வயதுக்கென்று வாய்க்கும் பிரத்தேயக
வாளிப்புடன் மலர்ந்திருந்தது உடல்.
சற்றே அகன்ற இடுப்பும் நன்கு முற்றிய வெள்ளரிப்பழ வடிவத்தில் தொடைகளும் வேதனையை அதிகப்படுத்த பெருமூச்சுடன்
படுக்கையில் அமர்ந்து கால்மேல்கால் சேர்த்து அழுத்திக்கொண்டாள். கைகளால்
தன்னைத்தானே இறுக அணைத்துக்கொண்டாள்.
நேற்றைய இரவு நடந்ததெல்லாம்
மீண்டும் நினைவுக்கு வந்தது. சே! எத்தனை அவமானம், இத்தனைக்குப்பின்னும் இந்த உடல்
ஏன் இப்படி வெக்கங்கெட்டு அலைகிறது.
அப்படியே படுக்கையில்
சாய்ந்தவள் மின்விசிறியை வெறித்தாள்.
நேற்று மாலையிலிருந்தே மனமும்
உடலும் நிலைகொள்ளாமல்தான் இருந்தது. பிள்ளைகள்
இருவரும் விடுமுறைக்காக ரகுவின் அண்ணனுடைய குடும்பத்துடன்
சேர்ந்து துபாய்க்குச் சுற்றுலா சென்றிருந்தார்கள்.
ரகு அலுவலகத்திலிருந்து வழக்கத்தைவிட சீக்கிரம் வந்துவிட்டான். அனுதான் அவனுக்கு
உணவு பரிமாறினாள். பிறகு ஏதோ பாடலை ஒலிக்கவிட்டபடி
ரகு கணினியைத் திறந்து வைத்துக்கொண்டு
அவன் முதலீடு செய்த ஷேர்கள் ஈட்டி தந்த வருவாயைக் கணக்கிடத் தொடங்கினான்.
வீட்டில் பிள்ளைகளற்ற தனிமையோ, ஒலித்த
பாடலின் இனிமையோ அல்லது பலநாட்களாய் கவனிக்காமல் விடப்பட்ட உடலின் தேவையோ, ஏதோவொன்று தூண்ட, அனு அவனருகில் அமர்ந்து அவன்
தோளில் தலை சாய்த்தாள்.
ரகு , படுக்கலாம்
வாங்க , குரல் சிணுங்கியது.
“ச்ச்சு,
நீ போய் தூங்கு, நான் இந்த ட்ரான்சாக்ஷனை
இன்னிக்கு முடிக்கணும்” என்றான் ரகு.
“Raghu, it’s been a longtime,
kids are not home”, மென்மையான குரலில் அனு கிசுகிசுத்தபடி அவள்
மூக்கால் அவன் கன்னம் உரசினாள்.
சட்டென அவளை உதறியவன், “Stop behaving like a bitch
Anu, இன்னிக்கு இந்த ஷேரை வித்தா
எவ்வளவு லாபம் வரும் தெரியுமா?
‘எதைப்
பத்தியும் அக்கறை இல்ல உனக்கு, வேலை செய்யறவனையும் கெடுக்காத’,
கொஞ்சமேனும் ரெஸ்பான்சிபிலிட்டி இருக்கா, ஆர் வீ ஹாவிங் அ ஹனிமூன் ஹியர்? சே, எப்பவும் இதே நினைப்புதானா உனக்கு”
ரகு
படபடவென பொரிந்து தள்ளினான்.
அனு சட்டென எழுந்து
அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள். அவளுக்கு அவமானமாய் இருந்தது. என்னவெல்லாம்
பேசிவிட்டான். இதுவரை ரகு இப்படி பேசியதே இல்லை.
வேகவேகமாய் சமையலறைக்குள்
சென்று தண்ணீரைச் சுட வைத்தவள் அது தளபுளாவென கொதிப்பதை பார்த்தபடி வெகு நேரம்
நின்று கொண்டிருந்தாள். தண்ணீர் சுண்டி, உலோக வாசனை அடிக்கத்
தொடங்கிய பின்னரே சுயநினைவுக்கு வந்தவள் அடுப்பை
அணைத்துவிட்டு அவர்களின் படுக்கையறைக்குள் செல்லாமல் பிள்ளைகளின் அறைக்குள் சென்று
படுத்தாள்.
இவர்களுக்குள்ளே இந்தப்
பிரச்சனை இன்று நேற்றல்ல பல வருடங்களாக இருந்து வருவதுதான். அவர்களுக்கு திருமணம்
ஆன புதிதில்
இவளைப் பிரிந்து அலுவலகம் போகவே
அலுத்துக்கொள்வான் . மூத்த பெண் பிறந்த பின்னரே
கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினான்.
அப்போது வேலை
பார்த்துக்கொண்டிருந்த நிறுவனத்தில் திடீரென்று
பணியில் இருந்து அவனை நீக்கி விட்டார்கள். நாலைந்து மாதங்கள் வீட்டில் இருந்ததில்
அவனது இயல்பே மாறிப்போனது . கைக்குழந்தை வேறு . பால்பவுடர், டையப்பர், தடுப்பூசி
என புதிது புதிதாய் சேமிப்பு குறைய குறைய
முகத்தில் எப்போதும் எரிச்சலும் பதற்றமும்
.
மீண்டும் வேறு நிறுவனத்தில்
சேர்ந்தபின்
கடுமையான உழைப்பு. காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால்
திரும்பி வர இரவு ஒன்பதாகிவிடும். வந்ததும் களைப்புடன் தூங்கி விடுவான்.
வார இறுதிகளிலும் பணி சார்ந்த தொடர்புகளுக்காகப் பூப்பந்தாட்டக்
கிளப்புகளிலும் மராத்தான் ஓடும்
குழுக்களிலும் சேர்ந்தான். வீட்டில் இருப்பதே இல்லை.
அனுவும் குழந்தை வளர்ப்பில்
மூழ்கி இருந்தாள். அவ்வப்போது அவன் விலக்கம் அவளுக்கு வருத்தத்தை அளித்தாலும்
பெரிதாக அவள்
கவலைப்படவில்லை.
பெரியவள் பிறந்து மூன்று
வருடங்களுக்குப்பிறகுதான் அனு அவனது அருகாமைக்காக அதிகம் ஏங்கத் தொடங்கினாள்.
அவனிடம் நேராக பேசிப் பார்த்தும் பிரயோஜனமில்லை , I am just busy
anu, என்றான்.
அதற்குப் பிறகே அனு
இரண்டாவது குழந்தையைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாள். இன்னொரு
குழந்தை உண்டானால் அவனுக்கு மீண்டும் தன் மேல் பிடிப்பு ஏற்படும் என்று
அனு தீர்மானமாக நம்பினாள். அவனிடம் அதைப் பற்றி முதலில் அனு பேச்செடுத்தபோது அவன் ஒப்புக்கொள்
வில்லை . சிங்கப்பூரின் ஏறிக்கொண்டேயிருந்த விலைவாசி அவனை பதற்றத்திலேயே
வைத்திருந்தது. படிப்புசெலவு, இன்சூரன்ஸ்
என்று வரிசையாகக் காரணம் சொல்லி மறுத்துவிட்டான்.
அனுவும் அப்போதைக்கு அவனை
வற்புறுத்தாமல் விட்டுவிட்டாள் .
அவனுக்கு
அந்த வருடம் சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு
வந்தது. உடனே மீண்டும் அனு இரண்டாம் குழந்தைத்
திட்டத்தைக் கையிலெடுத்தாள் . மெல்ல மெல்லப் பேசிப்பேசித்தான்
அனு அவன் மனதைக் கரைத்தாள். தெளிவாக
ஒரு எக்செல் ஷீட் போட்டு சம்பள உயர்வால் ஏறும்
சேமிப்பு, இன்னொரு குழந்தையால் வரவிருக்கும் செலவுகள்
எல்லாவற்றையும் தெளிவாக அட்டவணைப்படுத்தி ரகுவுக்குக் காட்டினாள்.
எல்லாவற்றையும் திட்டமிடும்
ரகுவை அனுவின் அறிவார்ந்த அணுகுமுறை கவர்ந்ததாலேயே அவன் சம்மதித்தான். அவன்
பங்குக்கு அவர்கள் கூடுவதற்கேற்ற தேதிகளை அவனும்
அட்டவணையிட்டான். இரண்டாமவள் பிறந்த பின் அவன் கடமை
முடிந்ததென ஒதுங்கிக் கொண்டான்.
அனுவுக்குத் திருமணத்தின்போது
இருபத்து மூன்று வயது,
முப்பது வயதுக்குள் எல்லாம் முடிந்தது விட்டதைப் போல் தோன்றிய
உணர்வை அவளால் தவிர்க்க முடியவில்லை. பிள்ளைகள் ஓரளவுக்கு வளரும்வரை அவளுக்கு இது பெரிதாக உறுத்தவில்லை. ஆனால் இன்று மூத்தவளுக்கு
பதினெட்டு வயது, இளையவளுக்கு பதினான்கு.
பிள்ளைகள் இருவரும் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும் நிலைக்கு
வந்துவிட்டார்கள். அவர்களுக்கு எந்த வகையிலும் இவள் உதவி தேவைப்படவில்லை. வீட்டு
வேலைக்கு ஆள் வேறு.
அந்த வீட்டில் இருக்கும்
ஜடப்பொருள்களில் தானும் ஒன்று என்ற உணர்வு அவளுக்கு அடிக்கடி எழும்.
வாசற்படியில் சுருண்டு
படுத்திருக்கும் ஒரு பாம்பைப் போல அவளைப் பயமுறுத்தியது நாற்பதுகளின் தனிமை. அதைத்
தாண்டவும் முடியாமல் தடிக்கொண்டு அடிக்கவும் முடியாமல்
எத்தனை அலைக்கழிப்பு .
இந்த வயதில் தாம்பத்தியம்
எத்தனை இலகுவாக நதியின் ஓட்டத்தைப்
போல, நின்று நிதானமாக பெய்யும் மழையைப்போல
இயல்பானதாக இருக்க வேண்டும். இப்படியா?
அவள் இதைப்பற்றி முதலில்
தன் அம்மாவிடம்தான் பேசினாள்.
அம்மா , இதெல்லாம் ஒரு
பிரச்சனையா? ஊரில் ஆம்பளைங்க எப்படியெல்லாம்
இருக்காங்க தெரியுமா? குடிக்கறது, குடிச்சுட்டு
வந்து பொண்டாட்டிய அடிக்கறதுன்னு. மாப்பிள்ளை அப்படி எல்லாமா இருக்கார்? ஏதோ வேலை பளு , நீ கொஞ்சம்
பொறுத்துக்கோடி என்றாள்.
அனு அவளது
நெருங்கிய தோழிகளிடமும் இதைப்பற்றி பேசாமல் இல்லை.
ரதியைத் தவிர வேறு யாரும் அவளை புரிந்து கொள்ளவில்லை. வயதுக்கு வந்த
பெண்குழந்தைகளை வைத்துக்கொண்டு இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்பது போல்
பார்த்தார்கள். உனக்கென்ன குறைச்சல் , கண் நிறைந்த
கைநிறைய சம்பாதிக்கும் கணவன், சிட்டுக்களைப்
போல் இரண்டு பெண்குழந்தைகள், வீட்டு வேலைக்கு ஆள், பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் நல்ல
வசதி . நிம்மதியாய் பொழுதைக் கழிக்க வேண்டியதுதானே
என்றார்கள். அதற்கு மேல் நீ அலங்காரம் செய்து கொள் ,
முருங்கைக்காய் சமை என பாக்கியராஜ் பாணியில் அறிவுரை வேறு.
ரதி
மட்டும் தான் புரிந்துகொண்டாள். அவன் சிறிது காலம் வேலை இல்லாமல் இருந்ததால்
மனஅழுத்தத்தில் இருக்கலாம், ரகுவின் மனப்பதட்டத்தைக்
குறைக்காமல் வேறொன்றும் நடக்காது. அதனால் அவனுக்கு பிடித்த விஷயங்களைச் செய்,
குடும்ப வரவு செலவுகளில் உனக்கும் அக்கறை இருக்கு எனக் காட்டு
என்றாள். அப்படிச் செய்ததுதான் எக்செல் ஷீட்.
சேமிப்பை வளர்க்கத் தானும் வேலைக்குப்
போகலாமென நினைத்து ரகுவிடம் சொன்னபோது , அவன் “நீ வீட்டில இருந்து குழந்தைகளைப் படிக்க வைக்கிற வேலையப்பாரு, சம்பாதிக்கறதை நான் பார்த்துகறேன் ” என்று
அழுத்தமாய் சொன்னான் . சரி, எதுக்கு
செலவு நானே வீட்டு வேலைகளைப் பார்க்கிறேன் என்றாள். அதுக்கும் அவன் ஒத்துக்
கொள்ளவில்லை.
அனுவுக்கு வெறுத்துப் போனது.
இதுதான் விதியென
ஏற்றுக்கொண்டு வாழ்வைக் கடத்தத் தொடங்கியாகிவிட்டது.
ஆனால் அவளும் ரத்தமும் சதையுமாய் இருக்கும் மனுஷிதானே ,
ஜடமாகவே இருந்துவிட முடியவில்லையே, அனு
நினைவுகளில் இருந்து மீண்டாள்.
திடீரென்று வீட்டின் சுவர்கள்
நான்கு பக்கங்களிலிருந்தும்
நகர்ந்து நகர்ந்து அவளை நெருங்கி வந்து
மூடுவது போலவும், நகரமுடியாமல் கால்கள் தரையோடு வேரோடி விட்டதைப்போலவும் உணர்ந்தாள். அனுவுக்கு மூச்சுமுட்டுவது
போல் இருந்தது. பிள்ளைகள் வரும்வரை தனியாக அவளால் இந்த
வீட்டில் இருக்கமுடியாதெனத் தோன்றியது. அவள்
முடிவெடுத்து விட்டாள்.
மாலை ரகு அலுவலகத்திலிருந்து
வந்ததும் அவனிடம் பேச்சைத் தொடங்கினாள்.
‘ரகு, நான் ஒரு வாரம் ஊருக்கு போய்விட்டு வரலாமென இருக்கிறேன்’
என்ன திடீருன்னு? கேட்டான் ரகு.
நேற்று பேசிய பேச்சுக்கு ஒரு
சாரி கூட கேட்க மனசில்ல,
அனு மனதுக்குள் குமுறினாள்.
“மதியம்
அம்மாகிட்ட பேசினேன், கொஞ்சம் உடம்பு சரியில்ல அவளுக்கு...
பாவம் வருத்தப்பட்டா...அதான்..”
குழந்தைகளும் ஊரில இல்லை..நான்
போயிட்டு வந்துடறேனே..
ஒரு நிமிடம் யோசித்தவன், “சரி, எப்போ கிளம்பணும்னு சொல்லு , டிக்கெட் போடறேன்”,
என்றான்.
அப்பாடாவென இருந்தது
அனுவுக்கு. மறுநாள் இரவு விமானத்தில் கிளம்பத் தயாரானாள். மளமளவென
காரியங்களைக் கவனித்தாள். துணிகளை எடுத்து வைத்தாள். அம்மாவுக்கும்,
தம்பிக்கும் சில பரிசுப்பொருட்களை வாங்கினாள்.
பணிப்பெண்ணுக்கு
உதவும் வகையில் வீட்டையும், ரகுவையும் பார்த்துக்
கொள்வதற்கான குறிப்புகளை ஒரு தாளில் எழுதி
குளிர்சாதனப் பெட்டியின் மேல் ஒட்டினாள். ரதியிடம் தான் ஒரு வாரம்
ஊருக்குப் போவதாக தொலைபேசியில் தெரிவித்தாள். அனு இஸ் எவ்ரிதிங் ஓகே? என்று கவலையுடன் ரதி கேட்டாள்.
அனு நடந்ததை அவளிடம் சொன்னாள்.
எனக்கு ஒரு வாரம் இவர விட்டு
எங்கேயாவது தள்ளிப் போகணும் போல இருக்கு ரதி..., எங்கேயாவது தூரமா, கண்காணா தேசத்துக்கு... முடியல ..
என்றாள்.
புரியது அனு, உனக்கும் இந்த
பிரேக் தேவைதான்.. போயிட்டு வா, அம்மாவ நான் விசாரிச்சதா சொல்லு.
ரதியிடம் பேசியபின் ஏதோ தெளிவு
பிறந்தது போல் இருந்தது.
சென்னைக்கு வந்து
இறங்கியாகிவிட்டது.
இவள் முன்னறிவிப்பின்றி வந்ததைக்குறித்து அம்மாவுக்கு ஒரே
ஆச்சரியம்.
“மாப்பிள்ளையோடு
பிரச்சனை ஒன்றும் இல்லையே?” என்று துருவியவள் ,
ஏன் நான்
வீட்டுக்குச் சொல்லாம வரக்கூடாதா, ஏதாவது
பிரச்சனையா இருந்தாத்தான் வரணுமா என அனு சிடுசிடுக்கவும் அமைதியாகி விட்டாள்.
அனுவின்
வீடு நங்கநல்லூரில் இருந்தது. ஊரே
மாறிப்போய்விட்டாலும் ஏனோ இவர்கள் தெரு பழைய மாதிரியே இருந்தது. அனு தன் அறைக்குள் சென்றாள். பழகிய செருப்புக்குள் பாதங்களை
நுழைக்கும்போது ஒரு ஆசுவாசம் ஏற்படுமே அது போல ஒரு நிம்மதி மனதில் படர அனு
பிரயாண களைப்புப்போக நன்கு தூங்கி
ஓய்வெடுத்தாள்.
எழுந்ததும் அவளுக்குப்
பசித்தது. அம்மா வற்றல் குழம்பும் ரசமும் வைத்திருந்தாள். தொட்டுக்கொள்ள
சுட்ட அப்பளம். அதிகம் பேசாமல் சாப்பிட்டாள். கையில் புத்தகத்துடன் ஊஞ்சலில் அமர,
அம்மாவும் அடுக்களை வேலைகளை முடித்துவிட்டு அருகில் வந்தமர்ந்தாள்.
“ அனு, ராஜேஷ் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கான்,
இனி இங்கதான் இருப்பானாம்”
அனுபெரிதாகஆர்வம்காட்டாமல்,ஓ!அப்படியா?என்றாள்.
ஆனால்
அம்மா தொடர்ந்தது , ‘அவனுக்கு விவாகரத்து ஆகிடுச்சு இல்ல
, அதனால் எல்லாத்தையும் விட்டுட்டு இங்கேயே வந்து விட்டான்.’
“பாவம்
ரங்கம், புள்ள இப்படி தனிமரமாயிட்டானேன்னு கவலை அவளுக்கு”.
என்றாள்.
ரங்கம் எனப்படும் ரங்கநாயகி
இவர்களது வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசிப்பவர். இருவரின் குடும்பத்துக்கும்
ஐம்பது வருடப் பழக்கம். ராஜேஷ்
ரங்கம் மாமியின் ஒற்றைப் பிள்ளை.
இவளைவிட இரண்டு வயது மூத்தவன். இருவரும் ஒரே பள்ளி ,கல்லூரியில்தான் படித்தார்கள். ராஜேஷ் பத்தாவது படிக்கும்வரை இருவரும்
ஒன்றாகத்தான் பள்ளிக்குச் செல்வார்கள். பிறகு அவன் அவளோடு வருவதை
நிறுத்திவிட்டான். அதில் அனுவுக்கு மிகுந்த வருத்தமுண்டு.
ராஜேஷ் படு வசீகரமான தோற்றம்
கொண்டவன். நல்ல உயரம் . கழுத்து வரை புரண்ட கேசமும் , சீரியசாக
பேசும்போது ஆட்காட்டி விரலால்நெற்றியில் கோடு வரையும் மேனரிசமும் அவனை இன்னும்
அழகாக்கி காட்டின. முகத்தில் எப்போதும் சிரிப்பு
ஒட்டியிருக்கும். சட்டென எல்லோரிடமும் பழகிவிடுவான்.
பள்ளியின் கிரிக்கெட் அணித் தலைவர்.
பள்ளியிலும் கல்லூரியிலும் அனு
உட்பட பல பெண்களுக்கு அவன்மேல் ஈர்ப்பு உண்டு. அம்மாவுக்கும் ரங்கம் மாமிக்கும்
கூட இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவிட வேண்டும்
என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அவன் கல்லூரியில்
தன்னுடன் படித்த பூரணியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டான்.
அவனைப் போலவே பூரணியும் கலகலப்பாக
பழகக்கூடியவள். அழகும் அறிவும் ஒருங்கே வாய்த்த பெண். அவனுக்கு எல்லா விதத்திலும்
பொருத்தமானவள் .
இருவரும் திருமணமாகி அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து வெவ்வேறு
சர்வதேச நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். அனுவும் திருமணம் முடிந்து
சிங்கப்பூருக்கு வந்துவிட்டாள். அதன்பின் இருவரும்
அதிகம் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் பேசிக்கொள்வதோடு சரி.
எத்தனை அன்னியோன்யமான காதலர்கள், விவாகரத்து ஆகும் அளவுக்கு அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்று அனுவுக்கு வியப்பாக இருந்தது. எதையெதையோ மனது அசைபோட ஊஞ்சலிலேயே உறங்கிவிட்டாள்.
அவள் கண்விழித்தபோது மாலை
ஐந்துமணிக்குமேல் ஆகிவிட்டது.
அம்மா வராண்டாவில் இருக்க வேண்டும். அனு முகம் கழுவிக்கொண்டு வெளியே
வந்தாள். மழைத்தூறிக்கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றியிருந்த மரங்களில் இருந்து
ஈரச் சருகுகளின் வாசம் காற்றில் மிதந்து வந்தது. வாசல் கேட்டருகே படர்ந்திருந்த
சந்தனமுல்லையின் பழகிய மணம் மனத்துக்கு இதமாக இருந்தது.
அம்மாவும் ரங்கம் மாமியும்
வராண்டாவில் அமர்ந்து பூத்தொடுத்துக்கொண்டிருந்தார்கள். மாமி இவளைப்பார்த்ததும்
அனுக்குட்டி! எப்படி இருக்க?
மாப்பிள்ளை செளக்கியமா என்று விசாரித்தாள். அனு மாமியின் அருகே
சென்று அவள் கையைப்பற்றிக்கொண்டு அமர்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தாள்.
மாமிக்குப் பெண்குழந்தைகள் இல்லாததால் அனுவின் மேல் அலாதி பிரியம். இத்தனை
வருடங்களுக்குப் பின்னும் அதே வாஞ்சையுடன் பேசினாள்.
அப்போது பக்கத்துவீட்டில் பைக்
சத்தம் கேட்டது. அனு அது ராஜேஷின் பைக்காகத்தான் இருக்கவேண்டுமென
நினைத்துக்கொண்டாள்.
இரண்டே நிமிடங்களில் இவர்களின்
வீட்டுக்கேட்டை திறக்கும் சத்தம் கேட்டது. ராஜேஷ்தான் வந்தான்.
அதே சாவதான நடை,அதே வசீகரம். எடை மட்டும் கொஞ்சம் கூடியிருந்தது.
அம்மா, நீ இங்கதான்
இருக்கியா என்று கேட்டபடி வந்தவன் அம்மாவைப் பார்த்து
“ ஹாய் மாமி” என்றான்.
பிறகு தான் இவளைக் கவனித்தவன், “ஏய் அனு,
வாட் அ சர்ப்பரைஸ் , நீ வந்திருக்கன்னு அம்மா
சொன்னா, எப்படி இருக்க, எவ்ளோ நாளாச்சு
பார்த்து?” என்று படபடத்தான்.
அவனைப்பார்த்து மென்மையாய்ச்
சிரித்த அனு அவன் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொன்னாள்.
“காபி சாப்பிடறியா ராஜேஷ்” என்று அம்மா கேட்க, “காபி மட்டும் இல்ல மாமி, இந்த மழைக்கு வடை ,பஜ்ஜி எது இருந்தாலும் சாப்பிடுவேன் பேய்ப்பசி” என்றான்.
சரி இருடா என்று இரு
பெண்மணிகளும் அடுக்களைக்குள் சென்று பஜ்ஜி தயாரிப்பில் ஈடுபட அவனும்
அனுவும் பேச்சில் மூழ்கினார்கள்.
ராஜேஷ்
விடைப்பெற்று சென்ற போது மழை சுத்தமாக நின்றிருந்தது. நேரம் போவதே தெரியாமல் பேசி
கொண்டிருந்திருக்கிறோம் என்பதை அனு உணர்ந்தாள்.
அதன்பின் ராஜேஷ்
அவர்கள் வீட்டுக்கு தினமும் வந்தான்.
காலையும் மாலையும் இருவருமாய் ஒன்றாக பூங்காவில்
நடைபயிற்சி செய்தார்கள். அவனது பைக்கில் அவளை ஷாப்பிங்
அழைத்துச் சென்றான். கோவிலுக்கு சேர்ந்து போனார்கள்.
கோவிலுக்குச் செல்ல சேலை
அணிந்து வந்தவளை ராஜேஷ் கண்கள்
விரியப் பார்த்தான். “நீ துளிக்கூட மாறலை அனு, அப்படியே இருக்க, இன்னும் கொஞ்சம் அழகாயிட்டனு வேணா
சொல்லலாம் “ என்று அவன் சொன்ன போது ஒரு கூடைப் பூவை தலையில் யாரோ கொட்டினார்கள்.
அனு
உற்சாகமாக இருந்தாள் . அருவிச்சாரலாய் மனம் குளிர்ந்து கிடந்தது. பழைய நட்புகள் மட்டுமே தரக்கூடிய ஆசுவாசத்தில்
அவள் லயித்தாள் . இருவருக்கும் இடையில் இருந்த இருபதாண்டுகள் காணமல் போய் ,
விட்ட இடத்தில் இருந்த நட்பை இயல்பாய் தொடரும் அளவுக்கு
இருந்த நெருக்கம் அவளுக்கு மகிழ்ச்சியளித்தது .எப்போது
வேண்டுமானாலும் பால்யத்துக்குள் நுழைந்து கொள்ளும் வசதியை சிறு வயது நட்புகள்
மட்டுமே அளிக்க முடியும். நெடுநாட்களுக்குப் பிறகு
உடலும் மனமும் எடையற்று இருக்க. இந்தப் புதிய உணர்வை அவள் சொட்டுவிடாமல் அனுபவித்தாள்.
அந்தச்
சனிக்கிழமை வழக்கம் போல் ரகு அவளை அழைத்துப் பேசும்வரை அவளுக்கு அவன் நினைவே
இல்லை. பட்டும் படாமல் பேசிவிட்டு வைத்தவள், ஒரு
வாரமாக எப்படி அவனை மறந்தோம் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தாள்.
ராஜேஷ் வந்தான். “அனு , ஒரு Long drive போலாம் வர்றியா ?”
இப்போவேவா ராஜேஷ்?
ஆமா, வொய் நாட்?
ஒரு நிமிடம் யோசித்தவள் , சரி இரு ,
அம்மாக்கிட்ட சொல்லிட்டு வர்றேன் என்றாள்.
துணி மாற்றும்போது அறைக்குள்
வந்த அம்மா அவளை
உற்றுக் கவனிப்பதுபோல் தோன்றியது.
என்னம்மா, ஏதாவது
சொல்லணுமா ?
அதெல்லாம்
ஒண்ணுமில்லடி, உனக்கு எது சரின்னு படுதோ அதைச் செய் என்றாள்.
அனு எதுவும் பேசவில்லை.
கார் மகாபலிபுரம் சாலையில்
சென்று கொண்டிருந்தது.
அனுதான் பேச்சைத் தொடங்கினாள்.
பூரணி எப்படி இருக்கா, ராஜேஷ்?
ஏன் திடீர்னு டைவர்ஸ்?
அவளுக்கென்ன, நல்லா
இருக்கா.மைக்ரோசாஃப்டில் நல்ல பொசிஷன், கை நிறைய சம்பளம்,
She is happy .
குழந்தைகள் வேண்டாம்னு ரெண்டு
பேரும் சேர்ந்து தான் முடிவெடுத்தோம். கேரியர்ல கான்சன்ட்ரேட் பண்ணினோம். இன்டிபென்டெண்டா
செயல்பட்டோம் ஒரு கட்டத்துக்கு மேலே இரண்டுபேருக்கும்
இடையில எதுவுமே பொதுவா இல்லை.
போரடிக்குது, பிரிஞ்சுடலாமான்னு
கேட்டா, டைவர்ஸ் கொடுத்துட்டேன் என்றான்.
சிறிது நேரம் பேசாமல்
இருந்தவன், How
is your married life? என்றான்.
All good, என்று
அனு சுருக்கமாகப் பதிலளித்தாள்.
“Sure? அப்புறம்
ஏன் வந்ததிலிருந்து அவரைப் பத்தி ஒரு வார்த்தைகூட
பேசலை” .
“பேச அவசியம்
வரலை.”
ஒரு நிமிடம் அமைதியாக
இருந்தவன் , இடது கையால் அவள் கையைப் பற்றினான்.
நம்ம ரெண்டுபேரும் கல்யாணம்
பண்ணி இருந்திருக்கணும் அனு என்றான்.
காரை நிறுத்திவிட்டு அவள்
கண்களை ஆழமாகப் பார்த்தான்.
அனு, நீ எவ்ளோ அழகா
இருக்க தெரியுமா?, You deserve a good life. இப்ப நீ
சரின்னு சொன்னா, நான் தாலி கட்டிடுவேன் என்றான்.
அனுவுக்கு மொத்த உலகமும் ஒரு நிமிடம்
அசைவற்றுப்போனது. காதில் மட்டும் ஹோவென இரைச்சல். தொம்
தொம்மென அதிர்ந்த இதயத்தை மூச்சை இழுத்துவிட்டுத்
சாந்தபடுத்தினாள்.
கண்களை
அழுந்த மூடித்திறந்தவள், அவன் கையை மென்மையாக விலக்கினாள்.
வண்டிய எடு ராஜேஷ் ,வீட்டுக்குப்
போகலாம் என்றாள்.
மறுநாளே சிங்கப்பூர்
திரும்ப டிக்கெட் போட்டாள்.
என்னடி திடீர்னு வந்த , திடீர்னு
கிளம்புற என்று கேட்ட அம்மாவிடம், வேலை இருக்கும்மா போகணும்
என்றாள்.
விமான நிலையத்துக்கு ரகு
வந்திருந்தான்.
பெட்டியை வாங்கக் கை
நீட்டியவனிடம் ,
It’s fine, I can manage என்றாள்.
போலாமா
என்று கேட்டபடி முன்னால் நடந்து சென்றவளிடம்
புதிதாக ஒரு நிமிர்வு வந்திருந்தது.
(மெட்ராஸ் பேப்பர் இதழில் வெளி வந்தது)

Comments
Post a Comment