பட்டு
பட்டு
செல்லம்மா அடுக்களை வேலைகளை முடித்தாள். மாலை ஐந்தரைக்கு
மணிக்கு தான் முதலாளி அம்மாவும் அய்யாவும் அலுவலகத்திலிருந்து வருவார்கள். அது வரை
ஓய்வு தான். ரஞ்சித் மதியம் தூங்கினால் அவளும்
சிறிது நேரம் தலைசாய்ப்பது உண்டு தான்.
ஆனால் இன்றைக்கு ஏனோ அவன் தூங்காமல் பொம்மைகளை
வைத்துக்கொண்டு விளையாட ஆரம்பித்து
விட்டான். செல்லமாளுக்கும் மதியம் தூங்கினால் பிறகு இரவில் தூக்கம் வருவதே இல்லை. ஆச்சு! இந்த ஆனி
வந்தால் அவளுக்கும் அறுபது ஆகி விடும்.
இனி தூக்கமெல்லாம் குறைந்து தான் போகும்.
செல்லம்மா
வாசல்படியைப் ஒட்டியிருந்த திண்ணைக் கட்டையில் அமர்ந்தாள். இங்கே அமர்ந்தால் கூடத்தில் விளையாடி
கொண்டிருந்த ரஞ்சித்தின் மேல் ஒரு கண்ணை
வைத்தபடி, தெருவையும் வேடிக்கைப் பார்க்கலாம். பக்கத்து வீட்டுக் கொடியில்
காய்ந்து கொண்டிருந்த துணிகள் அவள் கண்ணில் பட்டது. முதல் கொடியில் பனியன்,
கால்சட்டை, ரவிக்கை, பள்ளி சீருடை சட்டைகள்,போன்ற
அளவில் சிறியதான துணிகள். அடுத்த கொடியில் உள்பாவாடை, சல்வார் கமீஸ்,மிடி பாவாடைகள், துண்டுகள்
வகையறா.நல்ல வெயில் விழும் கடைசிக் கொடியில் புடவை, வேட்டி, பெரிய துண்டுகள். துணி
காயவைப்பதில் கூட எத்தனை நேர்த்தி. அப்படியே கொடியில் வைத்து தைத்தது போல் ஒரு
ஒழுங்கு.
துணி காயவைப்பதில் மட்டுமா, பக்கத்து வீட்டு சொர்ணம் எந்த வேலை செய்தாலும் அழகு தான். சிறியதாக கோலம் போட்டாலும், இரட்டை
இழையில் பார்க்க பளிச்சென்று
இருக்கும். நல்ல களையாக இருப்பாள், இனிமையாக பேசிப் பழகுவாள். அவர்கள் இந்த
வீட்டுக்கு குடி வந்து ஆறு மாதங்களே ஆகி இருந்தது. அதற்குள் அந்த குடியிருப்பில்
இருந்த மற்ற மூன்று குடித்தனக்காரர்களிடமும் நன்றாக பேசி பழகி ஒட்டிக்கொண்டு விட்டாள்.
கொடியில் அவள் நேற்று உடுத்தியிருந்த பட்டு சேலை காற்றில் சுடரைப் போல் அசைந்தது. தீ
கங்கு நிறத்தில் அரக்கு பார்டர் வைத்த
சேலை. உடலெங்கும் ஆங்காங்கே நட்சத்திரங்களை
தூவியதுப் போல் சின்ன சின்னதாய் ஜரிகை
புள்ளிகள். பார்டரிலும் ஒரு விரல் அகலத்தில் இரண்டு வரி சரிகை இழையோடி இருந்தது.
பெயருக்கேற்றார் போல் நேற்று அந்த சேலையில் சொர்ணம் கோபுர
கலசம் போல் மின்னினாள். ஏதோ
விசேஷத்துக்குப் போக கணவனோடு அவள் வண்டியில் ஏறியபோது புறப்பாட்டுக்காக அம்மனைத்
தூக்கி சப்பரத்தில் வைத்ததுபோல் இருந்தது.
பார்த்து
கொண்டிருந்த செல்லமாளுக்கு உள்ளுக்குள் காய்ந்தது. சாவதற்குள் இது போல ஒரு
சேலையாவது கட்டிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். எத்தனை வருட ஆசை, இன்னும்
நிறைவேறியப் பாடில்லை.
காஞ்சிப்பட்டு
சேலையை முதன் முதலில் அவள் பதினைந்து வருடங்களுக்குமுன் மேலத்தெரு செங்கமலமக்கா
வீட்டில் தான் கிட்டத்தில் பார்த்தாள். அதுவரை பட்டு சேலையை செல்லம்மாள் கையால் தொட்டது கூடஇல்லை. அக்கா அந்த சேலையை அவளின் மகள் திருமணத்துக்காக வாங்கி
வைத்திருந்தாள். அவர்கள் பக்கமெல்லாம்
கூரை சேலையெல்லாம் நூல் சேலை தான். பட்டு எடுப்பதெல்லாம் வழக்கத்தில் கிடையாது. பட்டணத்து மாப்பிள்ளை வீட்டில் காஞ்சிப் பட்டு தான் வேணுமென்று சொல்லி
விட்டார்களாம். அக்கா பெருமையாக சொன்னாள். அக்காவால் பட்டு வாங்க முடியும்,அவள் பெரிய சம்சாரி, காடும் கழனியுமாக
நிறைவாக இருக்கிறாள். செல்லமாளுக்கோ அன்றாடம்
சாப்பாட்டுக்கே அல்லாட்டம் , இதில் பட்டு
சேலைக்கு எங்கு போவது? அக்காவிடம் கேட்டு
அந்த சேலையை கையில் வாங்கி பார்த்தாள் . மீனின் அடிவயிற்றை தொடுவது போல் இருந்தது.
கையில் பிடிபடாமல் நழுவியது. அன்றே
தீர்மானித்து விட்டாள், ஒரு பட்டு சேலையாவது வாங்கி உடுத்திக் கொள்ள வேண்டுமென்று.
அதன்பின் கோவில் திருவிழாவில், தேரோட்டம் என எங்கு
போனாலும் பெரிய வீட்டுப் பெண்களின்
சேலைகளையெல்லாம் கவனித்துப் பார்க்கத் தொடங்கினாள். எத்தனை விதமான சேலைகள் ,எத்தனை வண்ணங்கள்.
பண்டிகை நாட்கள் வந்தாலே பட்டு , பட்டு என
அவள் மனசு கிடந்து தவிக்கும்
. “ஒரே ஒரு இழை சரிகை இருந்தாக் கூட
போதும், ஆனால் பட்டா இருக்கணும்” என்று நினைத்து கொள்வாள். ஆனால்
இதுவரை அவள் கனவு நிறைவேற வில்லை.
செல்லம்மாளுக்கு கள்ளக்குறிச்சிக்குப் பக்கத்தில் உள்ள சங்கராபுரம்
தான் சொந்த ஊர். இருந்த அரை காணி
நிலத்தில் உழுது பயி்ர் செய்து தான் பிழைப்பு
நடத்தினார்கள். அவ்வப்பொழுது மற்றவர் காட்டில் கூலி வேலைக்கு போவதும் உண்டு. எப்பொழுதும்
இவர்கள் வயலில் நெல் போடுவது தான்
வழக்கம். அந்த முறை பருத்தி போடலாம் என்று செல்லம்மாள் தான் சொன்னாள். பருத்திக்கு
நெல்லை விட மூன்று மடங்கு அதிக பாடும் செலவும், ஆனால் கையில் பணமும் அதிகமாக
நிற்கும். மூக்கில் கிடக்கும் மூக்குத்தி சென்ற முறை பருத்தி போட்டு வந்த வருமானத்தில் வாங்கியது தான். இந்தமுறை பட்டு சேலை வாங்க வேண்டும்,
பேத்திகளுக்கும் காது, மூக்குக்கு ஏதாவது செய்யலாம் என்று யோசித்தாள்.
அவள் கணவன் செல்வத்துக்கு அதில் விருப்பமில்லை. அவனை
வற்புறுத்தி பருத்தி விதைத்து விட்டு செல்லம்மாள் காட்டிலேயே நின்றாள். தண்ணீர்
பாய்ச்சுவது, உரம் வைப்பது, ஆடுமாடுகள்
பயிரில் வாய் வைக்காமல் பார்த்துக்கொள்வதென வயக்காட்டிலேயே பழியாய் கிடந்தாள்.
அவள் விதி , அத்தனை பாடுபட்டும் பாழாய்ப்போன
பூச்சிகளிடமிருந்து பயிரை காப்பாற்ற முடியவில்லை. அத்தனை பயிரும் பூச்சியடித்து பட்டுப்போனது. பெரிய நஷ்டம் . ஊரைச்சுற்றி கடன். பிள்ளைகள் போல் வளர்த்த பருத்தி பாழாய் போனதில்
உடைந்து போனான் செல்வம். காய்ச்சலில் விழுந்தவன்
தான், பிறகு எழுந்திருக்கவேயில்லை. வாங்கிய கடனுக்கு நிலத்தை விற்க வேண்டி
வந்தது.
மகன் சேலத்தில் ஒரு மில் ஓனர் வீட்டில் தோட்ட
வேலைக்குச் சென்றான். சம்பளத்தோடு , சாப்பாடும் போட்டு வீட்டோடு
அவனைத் தங்கச் சொன்னார்கள். செல்லம்மாள்
உள்ளூரிலேயே கூலிக்கு வேலைப் பார்க்கப் போனாள். இப்படி இருக்கையில் தான் செல்லம்மாளின்
மகன், தன்னுடைய முதலாளியின் மகள்
நெய்வேலியில் என்ஜினியராக இருப்பதாகவும், அவள் குழந்தைக்கு ஏதோ
உடல்நலமில்லையாம் . பேச்சும் வராது, அவனைப் பார்த்துக்கொள்ள வீட்டோடு ஆள்
வேண்டும் என முதலாளிக் கேட்டார். நீ போறியாமான்னு கேட்டான். மாதாமாதம் இரண்டாவது
சனி, ஞாயிறு லீவு தருவாங்களாம் நீ ஊருக்கு வந்து போகலாமென்று சொல்லி இங்கு கொண்டு
வந்து விட்டான்.
ரஞ்சித்தை பார்த்து கொள்வதற்காக இங்கு வந்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ரஞ்சித்துக்கு
பிறகு ரவி பிறந்து அவனும் இந்த வருடத் தொடக்கத்திலிருந்து பள்ளிக்குப்
போக ஆரம்பித்து விட்டான். ரஞ்சித்துக்கு
தான் இன்னும் பேச்சு வரவில்லை. மன வளர்ச்சியும் சற்று குறைவு என்று சொல்கிறார்கள்.
செல்லம்மாளின் உதவியின்றி அவனால் எதையும் செய்ய முடியாது. அதனால் அவனை பள்ளிக்கு
அனுப்பவில்லை. அடுத்த வருடம் இவனைப்போல் பேச்சு வராத குழந்தைகளுக்கான பள்ளியில்
சேர்த்து விடப்போகிறார்களாம். “பேச்சு வராவிட்டாலும் நல்ல புத்திசாலிப்பிள்ளை தான், நம்ம கிட்ட
எத்தனை பாசம் . நல்லப்படியா ஆயுசோட இருக்கட்டும் என செல்லம்மா நினைத்துக்கொண்டாள்.
முதலாளியம்மாள் நல்லவள் தான் .ஆனால் பண விஷயத்தில்
கறாராய் இருப்பாள். மூன்று வேலை சாப்பாட்டுக்கு குறைவில்லை, தீபாவளி பொங்கலுக்கு
புது சேலை எடுத்து தருவாள். சம்பளத்தை மகனிடம் கொடுத்துவிடும் படி செல்லம்மா
சொல்லியிருந்தாள். அவளின் கைச்செலவுக்கு மகனிடம் இருந்து ஐநூறோ, ஆயிரமோ வாங்கிக்
கொள்வாள். முதலாளியம்மா வித்யா அவளின் பழைய புடவைகளை
அவளுக்கு கொடுப்பதுண்டு, பெரும்பாலும் பூனம் புடைவைகள். செல்லம்மாக்கு அந்த புடவைகள் பிடிக்காது, சமையல்கட்டில்
நிற்கையில் வெந்து போகும். வேறு வழியில்லாமல் அவற்றை உடுத்திக்கொள்வாள்.
சொர்ணம் வீட்டில்
எப்பொழுதும் பருத்தி புடவைகளை தான் உடுத்துவாள். அதிலும் பெரும்பாலும் ஒரு
வரி சரிகையாவது இருக்கும். எந்த சேலையாக
இருந்தாலும் படிய படிய பாந்தமாக
உடுத்துவாள். வித்யாவை போல் புசுபசுவென உடுத்துவதில்லை.
அவள் இங்கு குடி வந்ததில் இருந்து தான் செல்லமாளுக்கு மீண்டும் சேலை பித்து தலைதூக்கியது.
சொர்ணமும் கிட்டத்தட்ட இவள் வயதையொத்தவள் , அதனாலோ என்னவோ அவள் நல்ல புடவை
உடுத்தினாலே இவளுக்கு உள்ளூர எரிந்தது. சொர்ணம் இவளிடம் அன்பாய்த்தான் பழகுவாள், மாலை
நேரங்களில் அவளோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பாள். செல்லம்மாள் பக்கத்தில்
கடைக்கு எங்கேயாவது போனால், ரஞ்சித்தை அவளிடம் விட்டுச் சென்றதும் உண்டு . அன்பாக பார்த்து கொள்வாள். ஆனாலும் அவளிடம்
முழுமையாக ஒட்டவிடாமல் செல்லமாளை ஏதோ ஒன்று தடுத்தது. அதற்கு சொர்ணம் எந்த விதத்திலும் பொறுப்பு அல்ல.
கணகணவென கனன்று கொண்டிருந்த குமுட்டி அடுப்பை, யாரோ
விசிறிவிட்டு எரிய வைத்தாற் போல் நேற்று
சொர்ணத்தை பட்டு சேலையில் பார்த்ததிலிருந்து
அவள் மனம் நிலைகொள்ளாமல்
அலையத்தொடங்கியது. வெறும் ஆசை மட்டும் தானா ,
அல்லது பொறாமையுமா என்று செல்லமாவுக்கே தெரியவில்லை.
சொர்ணம் காலையில்
அந்த சேலையை வெயிலில் போடுவதற்காக எடுத்து வந்த போது செல்லம்மாள் முருங்கை கீரையை
ஆய்ந்தபடி இது போல வாசற்படியில் தான்
அமர்ந்திருந்தாள். சொர்ணத்தைப் பார்த்ததும், “ நேத்து அந்த சேலை உனக்கு அவ்ளோ நல்லா
இருந்ததும்மா, பார்க்க அம்மன் சாமியாட்டம் இருந்த” என்று மனதாரப் பாராட்டியவள், “சாவறதுக்குள்ள இது மாதிரி ஒரு
சேலையாவது வாங்கி உடுத்திடணும்” என்றும் சொன்னாள் . சொர்ணம்
எதுவும் சொல்லாமல் சிரித்தபடி சேலையை கொடியில் போட்டு விட்டுச் சென்றாள்.
இப்போது ரஞ்சித் அவனுடைய பொம்மைகளை எடுத்து கொண்டு வெளியில் வந்தமர்ந்து
விளையாட ஆரம்பித்தான்.செல்லம்மா எழுந்து பக்கத்து வீட்டு துணிக்கொடிகள் இருந்த
இடத்துக்குச் சென்றாள். கடைசி கொடியில்
இருந்த பட்டு சேலையை தொட்டுப்
பார்த்தாள். விரல்களுக்கிடையில் துணி வழுக்கி கொண்டுபோனது. எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.
முகத்தோடு தேய்த்தாள். சரிகையை
விரல்களால் மெல்ல நீவிப் பார்த்தாள். ஒவ்வொரு சரிகை புட்டாவையும் தனித்தனியாக
தொட்டுப் பார்த்தாள். கையில் எடுத்து தோளில் போட்டுக்கொள்ளும் ஆவல் எழ புடவையை பிடித்திருந்த கைகளை
அவசரமாய் எடுத்தாள்.
திடீரென்று தான் அந்த எண்ணம் தோன்றியது. உடனே பத்த வைத்தாற்போல் அவளின் உடலெங்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெயிலில் வியர்வை ஆறாகப்பெருகி உள்ளங்கையெல்லாம்
ஒரே பிசுபிசுப்பு. காதருகில் யாரோ ஒயாமல்
“செய் !செய்! என்று அலறுவதாய் அவளுக்குப் பட்டது. நெஞ்சு பறை அடிப்பது போல் “தொம் தொம்” என்று அதிர்ந்தது.
செல்லம்மா அந்த சேலையை மீண்டும் பார்த்தாள். கம்பி
வேலிக்கு அருகே அதை சொர்ணம் உலர்த்தியிருந்தாலும் , காற்று பலமாய் வீசினாலொழிய
சேலை வேலியில் படாது. சட்டென சேலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் கிளிப்பை கழற்றி ,
சேலையை சற்று ஓரமாக தள்ளி மீண்டும் கிளிப்பை மாட்டினாள். தொங்கி கொண்டிருந்த சேலையின் ஒரு மடிப்பை பிடித்து தூக்கி கம்பி வேலியின் மேல் போட்டவள், அதை பலத்துடன் பிடித்திழுத்தாள்
, சேலை சரக்கென கிழிந்தது. உடல் நடுங்க கைகளை
அவள் அவசரமாய் விலக்கி கொண்டாள். சட்டென
அனைத்து பரபரப்பும் அடங்கி
அமைதியானது. செல்லமாவுக்கு தான் என்ன செய்தோம் என உணருவதற்கு சற்று நேரம்
பிடித்தது. புரிந்ததும் , அவள் ஒரு
விநாடி விக்கித்து நின்றாள். “அப்படியென்ன உனக்கு புடவை பைத்தியம்” என அவள் புத்தியே அவளை கேள்வி
கேட்க “அய்யோ! இதை நாமா செய்தோம் ?” என
தவித்துப்போனாள்.
அவசரஅவசரமாக
யாரும் பார்க்கிறார்களா எனச் சுற்றுமுற்றும் பார்க்க ரஞ்சித் குட்டி அவளையே கவனித்துக்
கொண்டிருப்பதைப் பார்த்தாள். சேலை அப்படியே வேலியில் மாட்டியபடி இருக்க ,
பரபரவென நடந்து மீண்டும் வாசல் திட்டில்
வந்து அமர்ந்தாள். நெஞ்சின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. ரஞ்சித் குற்றம் சாட்டுவதுபோல்
அவளையே பார்த்து கொண்டிருந்தான். செல்லம்மாளுக்கு மனம் உறுத்த தொடங்கியது .
அசிங்கத்தை வலிய சென்று உடல் முழுவதும் பூசிக்கொண்டதைப்
போன்ற அவமானம்.
பக்கத்து வீட்டு கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
செல்லம்மாள் மூச்சை இழுத்து விட்டுத் தன்னை நிதானப்படுத்திக்கொண்டாள். அந்த வாய் பேசா
பிள்ளையை கண்களால் இறைஞ்சினாள்.
கதவு திறத்து
வந்த சொர்ணம், “தூங்கலியா செல்லம்மா?” என்ற கேட்டபடி துணிகளை எடுக்க கொடிகளுக்கு
அருகில் சென்றாள். செல்லம்மா பார்த்து கொண்டேயிருக்க முதல் கொடியில் இருந்த
துணிகளை எடுத்தாள்.
பனியன், கால்சட்டை.... இதோ இரண்டாம் கொடியில் உள்ள
துணிகளை எடுக்க ஆரம்பித்தாள்.
இதோ இதோ... மூன்றாவது கொடியை நெருங்கி விட்டாள்.
துண்டுகள், வேட்டி.....
செல்லமாவுக்கு படபடப்பில் மயக்கமே வரும் போல இருந்தது.
சொர்ணம் ஒரு வழியாய் பட்டு சேலையைப் பார்த்து விட்டாள்.
“அடடா! சேலை வேலியில் மாட்டிகிச்சே, போடும் போதே நெனச்சேன்...”
“பாரு செல்லம்மா, சேலை வேலியில மாட்டி கிழிஞ்சிருச்சு...
சே ! நல்ல புடவை நான் இன்னும் கவனமாக இருந்திருக்கணும்” என்று புலம்பினாள்.
“அய்யோ! என் கண்ணு தான் பட்டுடுச்சோ என்னவோம்மா, காலையில
தான் உனக்கு அழகாயிருந்துதுன்னு சொன்னேன், இப்படி ஆயிடுச்சு” என குற்ற உணர்ச்சியில் குரல் கம்ம,
சற்றே வருத்தம் இழையோடும் குரலில் செல்லம்மா சொன்னாள்,
“அட , நீ வேற செல்லம்மா, நல்லவங்க கண்ணெல்லாம் ஒண்ணும்
செய்யாது, நீ சொல்லி எனக்கு திருஷ்டி படுமா? நான் அந்த வேலியோரம்
போட்டதுதான் தப்பு .
விடு! நிறைய கட்டியாச்சு” என்று சொர்ணம் அப்பாவியாக அவளை சமாதானப்படுத்தினாள்.
செல்லமாளுக்கு அழுகை வந்துவிடும் போல் இருந்தது.
“என்ன, காலையில நீ சாகறதுக்குள்ள இதே மாதிரி சேல கட்டணும்னு
சொன்னியா, மனசு ஒருமாதிரி ஆகிடுச்சு
செல்லம்மா, நிறைய கட்டியாச்சே , அயர்ன் பண்ணி உனக்கு கொடுத்துடணும்னு நினைச்சேன்,
இப்படி ஆயிடுச்சு, இப்ப உனக்கு கிழிஞ்ச சேலைய எப்படி கொடுக்கறது, அது தான்
வருத்தமா இருக்கு “ என்று சொல்லி முடித்தாள்.
செல்லம்மா அப்படியே அதிர்ந்து போனாள். அவளருகில் தன் பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருந்த ரஞ்சித்தின் சிரிப்பு
அவளை கேலிச் செய்வதாய் அவளுக்குத் தோன்றியது.
பா.ரேவதி
29.08.25
(டிசம்பர் 2025 சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் வெளி வந்தது.)
.

Comments
Post a Comment