மறதியின் மலர்- இஷிமு ஷிகிபு கவிதைகள் குறித்து
நம் பழந்தமிழ் இலக்கியங்களில் மிக தொன்மையானது சங்க இலக்கியம். சங்க காலம் என்று வரையறுக்கப்படும் கி.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 4 ஆம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டு கால கட்டத்தில் கிட்டத்தட்ட 475 கவிஞர்கள் சங்கப் பாடல்களைப் பாடியுள்ளனர் என விக்கிப்பீடியா கூறுகிறது. அதில் முப்பத்தியெட்டுப் பேர் பெண்பாற்புலவர்கள். சிறப்பான அழகியல் கூறுகளும், வாழ்வியல் உணர்வுகளும் கொண்ட கவிதைகளை இந்தப் பெண்டிர் உருவாக்கியுள்ளனர் என்பது வாழ்வியல் குறித்தும் கலை வெளிப்பாடு குறித்தும், பெண் கவிதை மொழி குறித்தும் அப்போது நிலவிய செறிவான பல மதிப்பீடுகளை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. நம் சங்ககால பெண் புலவர்களுக்கு நிகராக அதே காலக்கட்டதில் வேறு உலக மொழிகளில் பெண் கவிஞர்கள் இருந்துள்ளனரா எனத் தேடினால் அப்படி யாரும் இல்லையென்பதே பதிலாக இருக்கிறது. நம் சங்க இலக்கிய பெண்களோடு ஒப்பிட பிற்காலத்தில் சீன மொழியில் எழுதிய ஒரிருவரைத் தவிர, ஜப்பானில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரைக்குமான ஹயன் (Heian )காலத்தில் எழுதிய சில பெண்கவிஞர்களை குறிப்பிடலாம். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் அரசகுடும்பத்து பெண்களாகவே இருந்தனர். ஜப்பானில் சீன கலாச்சாரத்தின் ஆதிக்கம் குறைந்து ஜப்பானிய கலாசாரம் தலையெடுத்த காலக்கட்டம் ஹயன் காலம். ஆண்கள் வியாபார நிமித்தமாகவும் பொருள் தேடியும் பயணங்களில் ஈடுபட அரண்மனைக்குள் அடைந்து கிடந்த கல்விப் பெற்ற பெண்கள் கவிதைகள் எழுத தொடங்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் இஸூமி ஷிகிபு, முரசாகி ஷிகிபு, சீமாட்டி சாராஷின்னா, செய் ஷோனகோன் ஆகிய நால்வரையும் முக்கியமானவர்களாக குறிப்பிடலாம். அதில் இஸூமி ஷிகிபு மரபுகளை உடைத்த ,உணர்ச்சியை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தக்கூடிய ,ஆளுமை நிறைந்த பெண்கவிஞாராய் கருதப்படுகிறார். இஸூமி புதிய சொல்லாடல்களுடன் எளிமையும், கச்சிதமான வடிவமும் கொண்ட கவிதைகளைப் படைத்து இன்று வரை ஜப்பானிய இலக்கியத்தின் மகத்தான பெண்பாற் கவிஞராக மதிக்கப்படுபவர்.
இஸூமி
ஷிகிபு( Izumi Shikibu)
இஸுமி
ஷிகிபு ஹயன் காலத்தை சேர்ந்த ( Heian)ஜப்பானிய பெண்
கவிஞர். ஹயன் காலத்தை ஜப்பானிய கலை இலக்கியத்தின்
பொற்காலம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஹயன் என்ற சொல்லுக்கு
ஜப்பானிய மொழியில் அமைதி (Peace ) எனப் பொருள் .
இந்தகாலக்கட்டத்தில் மோனோகடாரி( monogatari)
என்றழைக்கப்படும் புனைந்துரைக்கதைகள் , நிக்கி
என்றழைக்கப்பட்ட டைரி குறிப்புகள், தன்கா, வாகா போன்ற கவிதைப் பாணிகள்
ஆகிய புதிய இலக்கியவடிங்கள் பிறந்தன. இந்த காலத்தின் மிக
சிறந்த கவிஞராக இஸூமி கருதப்படுகிறார்.
இஸுமி
ஷிகிபு பிரபுத்துவ குடும்பத்தை சேர்ந்தவர். ஜப்பானிய
அரசர் சோஷியின் அரசவை கவிஞர். இவர் மத்திய காலத்தை சேர்ந்த அழியாப்புகழ்பெற்ற முப்பதியாறு கவிஞர்களுள் (Thirty six Immortals)மிகவும் குறிப்பிடத்தக்கவர். மிகுந்த
பிரபலமும் செல்வாக்கும் பெற்றவரும் கூட. .
இவர்
கவிதைகள் காதல், ஏக்கம், இயற்கை,போன்ற
கருப்பொருள்களின் வாயிலாக ஹயன் காலத்தின் அரண்மனை வாழ்க்கையை வாசகனுக்கு அறிமுகப்படுத்துவன.
மிதமான
உணர்ச்சிகளும்,
இனிய படிமங்களும் நிறைந்த கவிதைகள் இவருடையவை. இயற்கை
காட்சிகள், விடியல், நிலவு ,அந்தி என பொதுவாக ஜப்பானிய
கவிதைகளில் இடம்பெறும் காட்சிப்படிமங்களை அவர் கவிதைகளிலும் காணலாம்.
ஷிகிபுவின்
மொழி மிகவும் பிரத்தேயகமானது. தனக்கென ஒரு தனி அடையாளத்தை தன் மொழியின் மூலம் அவர்
வளர்த்துக்கொண்டார். அவர் அதிகமாக
"தன்கா" (Tanka) எனப்படும்
கவிதை வடிவத்தைப் பயன்படுத்தினார். வாக்கா (Waka)என்ற கவிதை வடிவத்திலும் தேர்ந்தவர்.
தன்கா
என்றால் குறுங்கவிதைகள் என்றுப் பொருள். இது
ஐந்து வரிகள் 31 அசைகளை/சொற்களை
கொண்டஒரு கவிதை வடிவம். ஒவ்வொரு
வரியிலும் சொற்கள் 5-7-5-7-7 என்ற
முறையில் அமைந்திருக்கும் . மிகவும் கட்டுப்பட்ட அமைப்புடைய ஒரு
கவிதை வடிவம். இத்தனை வரையறைகளுக்குள் ஆழமான அக
உணர்வுகளை அழகுற வெளிப்படுத்தக்கூடிய திறமை
வாய்ந்தவராக இஸூமி திகழ்ந்தார்.
இயற்கை
காட்சிகள், மாறிக்கொண்டே இருக்கும் பருவநிலைகள், மலர்களின்
மென்னழகு போன்ற படிமங்களை அவர் கவிதைகளில் அதிகம் காணலாம். பெரும்பான்மையான அவரின்
கவிதைகள் கரைந்து கொண்டேயிருக்கும் காலத்தைப் பற்றிய
ஏக்கத்தையும் நெகிழ்வான மனித அனுபவங்களையும்
பிரதிபலிப்பவையாக இருந்தன. வாழ்வின் மீது அசாதாரணப் பிடிப்பைக்கொண்டவராகவும், நுண்ரசனையுடன்
வாழ்வை பார்ப்பவராகவும் இஸூமி தன்னை
வெளிப்படுத்துகிறார். அவர் மொத்தம் 242 கவிதைகளை எழுதியுள்ளதாக தெரிகிறது.
கவிதைகளைத்
தவிர , இஸூமி நிக்கி என்றழைக்கப்பட்ட ஒரு
பயணக்குறிப்பையும் எழுதியுள்ளார். இது "இஸுமி ஷிகிபு நிக்கி"
(The Diaries of Izumi Shibu) என்று அழைக்கப்படுகிறது.
இந்த தொகுப்பில் தனது பயணங்களைப் பற்றிய குறிப்புகளை அவர் எழுதியுள்ளார்.
இத்தொகுப்பின் வாயிலாக ஹயன் காலத்தைப் பற்றியும்
, அரசகுடும்பங்களின் வாழ்க்கைமுறைகளையும் பற்றியும் அறியமுடிகிறது. இதில்
கூறப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையில்லை புனைகதை
கலந்தது என்று வாதிக்கும்
ஆய்வாளர்கள் உண்டு., இருந்தாலும் ஹெயன்
காலத்து அரண்மனை வாழ்க்கையைப் பற்றி அறிய இது ஒரு முக்கியமான ஆதாரமாக திகழ்கிறது.
பல
காதலர்களை கொண்டவராக அறியப்படும் இஸூமிபை் பற்றி பல
வதந்திகள், வரலாற்று கதைகள் புழக்கத்தில்
உள்ளன. இரண்டு திருமணங்கள் செய்தவர். இரண்டு அரசகுமாரர்களுடன் காதல் உறவில் இருந்தவர் என இவரைச் சுற்றி பலகதைகள். இவரை மோகினி என்றழைப்பவர்களும் உண்டு. காதலை காதலிக்கும் கவிஞராகவே தன்னை
வெளிப்படுத்திக்கொள்ளும் இஸூமி , அலைபாயும் மனதையும்
கடக்கவொண்ணா உடலையும் பற்றி தீவிரமான பல கவிதைகளை நமக்காக விட்டுச்சென்றுள்ளார். பிற்காலத்தில்
புத்தமதத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவர் மிஞ்சிய வாழ்நாள்
முழுவதும் புத்த போதகர் ஆடையை மட்டுமே அணிந்தபடி புத்த சன்யாசினியாகவே
வாழ்ந்து மறைந்தார். . அவருக்கு தர்மப் பெயராக "சேஷின்
இன்சே ஹோனி" (Seishin Insei Hōni) என்றப்பெயர் வழங்கப்பட்டது.
இஸூமி ஷிகிபுவின் எழுத்துக்களை முரசாகி ஷிகிபு (The Tale of Genji எழுதியவர்), மற்றும் செய் ஷோனகோன் (The
Pillow Book எழுதியவர்) போன்ற அந்தக் காலக்கட்டத்தின் சிறந்த பெண்
எழுத்தாளர்களின் படைப்புகளுடன் ஒப்பிடலாம்.
இஸூமி
ஷிகிபு கவிதைகள்
இஸூமியின் கவிதைகள் தீவிரமான மன உணர்வுகளை மிக நுட்பமாக உணர்த்துவதிலும்
அதன் கச்சிதத் தன்மையாலும் தனித்து நிற்பன.
காதல் கவிதைகளில் சற்றே ஜென் வாசனையையும், தத்துவ
கவிதைகளில் அழகியலையும் கலந்து மரபுகளை சர்வசாதாரணமாக மீறுகிறார்
இஸூமி. அவரது கவிதைகளின் மொழிப்பெயர்ப்பு கீழே.
இங்கு
காற்று
கடுமையாக
வீசினாலும்
இந்த
பாழடைந்த வீட்டின்
கூரை
பலகைக்களுக்கூடே
நிலவொளி
கசியத்தான்
செய்கிறது.
இந்த
கவிதை தனிமையை, அதனால் ஏற்படும் வெறுமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்து உள்ளது. இயற்கையின் அழகை நுட்பமாய்
கொண்டாடிய ஹைனன் காலத்து கவிதைகளிலிருந்து இது
சிறிது மாறுப்படுகிறது . கடும் காற்றும், நிலவொளியும்
இரு எதிர் உணர்வுகளுக்கான படிமங்கள். கடும் காற்று
ஒருவிதமான கொந்தளிப்பை , அகத்தத்தளிப்பை காட்டினாலும்,
கூரையினூடே தெரியும் ஒளி கவிஞருக்கு
நம்பிக்கையை ஊட்டுகிறது. சிதைந்த வீடு ஒரு உடைந்த மனதுக்கு குறியீடாகிறது.
யாருக்காக
காத்திருந்தேனோ
அவர்
இப்பொழுது வர நேர்ந்தால்
என்ன
செய்வேன் நான்?
பனி
மூடிய
இந்த
காலைத்தோட்டம்
எவருடைய
காலடிப்பட்டும்
கலையக்கூடாத
அளவிற்கு
எழிலாய்
உள்ளது.
இந்த
கவிதையும் இருவேறு முரண்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு தான். மனித மனம்
முரண்களால் ஆனது. அதிலும் பெண் மனதைப் பற்றி கேட்கவே
வேண்டாம். அது சதா வெறுப்புக்கும் விருப்புக்கும், இடையே
ஊசலாடிக்கொண்டே இருப்பது. இதயம் கேட்பதை மூளை விரும்புவதே இல்லை. நீண்டநாளாய் எதிர்பார்த்திருந்த சந்திப்பு நிகழ வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இப்பொழுது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் தருணமோ அதைவிட முக்கியமாக, அழகாக தெரிகிறது.
இப்பொழுது எதை தேர்ந்தெடுப்பது? வெளியே
மழையும் , வேடிக்கைப்பார்க்க ஒரு சன்னலும் கிடைத்துவிட்டால்
அங்கேயே சமாதியாக சம்மதிப்பவர்கள் பெண்கள். பனிக்கால தோட்டத்தின் எழில் சிறிதாக
தோன்ற வேண்டுமெனில், வரவிருப்பவர் அப்படி ஒரு உறுதியை தரக்கூடியவராக இருக்க
வேண்டியது அவசியமா இல்லையா?
எந்த பாதம்பட்டும் கலைக்கக்கூடா அந்த தோட்டம்
இங்கு உணர்வுகளின் சமநிலையை குறிக்கும்
குறியீடாகிறது.
விடியற்காலையில்
வானத்தின்
மத்தியில
தனித்திருக்கும்
நிலவைப்
பார்த்தபடியிருக்கிறேன்
என்னை
நான்
முழுமையாகத்
தெரிந்துகொள்கிறேன்
துளியும்
மீதமின்றி.
ஜப்பானிய
கவிதைகளில் அடிக்கடி காணப்படும் படிமமாக
நிலவு இருக்கிறது. அழகு, வாழ்வின் நிலையின்மை,
தனிமைத்துயர், தனிமையின் இனிமை கார்காலத்தின்
அழகு என பல உணர்வுகளை வெளிப்படுத்த ஜப்பானியர்கள் நிலவையே பயன்படுத்துகிறார்கள். உலகெங்கும் கவிஞர்கள்
நிலவை காதலிப்பவர்களாகவே இருக்கின்றனர். நம் தமிழ்
கவிஞர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மூன்றாம் பிறையோ,
முழுநிலவோ நிகழும் நாட்களிலெல்லாம் நம் முகநூல் செயலிகள் நிலவு
கவிதைகளால் நிரம்பி வழிகிறது. இத்தனைப்பேர் இத்தனை பாடித்தீர்த்தப் பின்னும்
நிலவு மங்காத இளமையுடன் தான் இன்னும்
வானத்தில் ஓளிர்கிறது.
இந்த
கவிதையில் கவிஞர் புலரியில் ஒளிரும் நிலவைப் பற்றி பேசுகிறார். பார்த்தவர்களுக்குத் தெரியும் , இன்னும்
புலராத காலையின் நிலவுக்கு தனிஓளியென்று. யாருமில்லா
தனிமையில் நாம் வாய்விட்டு பாடும் பாட்டைப் போல ரகசிய இனிமைக்கொண்டது அது.
நிலவுடனான அந்த தனிமையில் கவிஞர் தன்னை
முழுவதும் உணர்கிறார். நிலவின் ஒளி அவர்
மனதின் இருண்ட மூலைகளில் ஒளியைப்பாய்ச்சுகிறது. அகத்திருளை
விலக்கி அவரையே அவருக்கு வெளிச்சமிட்டுக்காட்டுகிறது. நிலவு ஞானத்தின் ஊற்று.
தன்னையறிதல்
எல்லோருக்கும பிடித்தமான ஒன்றல்ல. அதனால் தான் பௌர்ணமியில் அண்ணாந்தப்படி நடக்கும்
நாம் , அடுத்த நாள் அவசரஅவசரமாய் தலையை
குனிந்துக்கொள்கிறோம்.
ஒற்றை
எண்ணமாக
புத்தனின்
போதனையை
என்மனதுள்
நிறுத்தவே
முயல்கிறேன்
எனினும்
என்
செவிகளில் கேட்கும்
சுவர்கோழிகளின்
அழைப்பை
தவிர்க்கவே
இயலவில்லை.
மனித
மனம் விசித்திரமானது.
எல்லா நேரத்திலும் அது நம்
கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. நம் மனம் என்னும் விலங்கிற்கென தனி மனம் உள்ளது. அது நாம் சொல்வதை கேட்பதேயில்லை. அதிலும் உன்னை அடக்கிக்காட்டுகிறேன் பார் என நாம் முஷ்டியை
முறுக்கிக்கொண்டு தியானத்தில் அமரும்போதெல்லாம் தான் அது
குதித்து குத்தாட்டம் போடுகிறது. இஸூமிக்கும்
அவ்வாறேதான் நடக்கிறது. புத்தனின் போதனையை மனதில் வைக்கமுடியாமல் அவரைச் சுற்றி
சுவர்கோழிகள் ஓயாமல் இரைகின்றன. அறிவு புத்தனை நாடுகையில் மனமோ வேறொன்றைத் தேடுகிறது. இங்கு
சுவர்கோழிகள் உலகியல் இச்சைகளுக்கான குறியீடாகிறது.
இஸூமி ஷிகிபு தன் கவிதைகளில் காதல்,
காமம் என உலகியல் இச்சைகளுக்கும்அதைகடந்த இறைநிலைக்கும் இடையே ஊசலாடுபவராகவே தொடர்ந்து தன்னை
வெளிப்படுத்திக் கொள்கிறார்.
என்னால்
எது எதுவென
சொல்ல
இயலாது
ஒளிரும்
ப்ளம் பூக்களா
வசந்தகால
இரவின்
நிலவா?
பைன்
மரங்களும், ப்ளம் பூக்களும் ஜப்பானிய கவிதைகளில் அடிக்கடி இடம்பெறும் படிமங்களே.
இங்கு பிளம் பூக்களின் வெண்மை ஓளிரும் நிலவுக்கு ஒப்புமைப்படுத்தப்படுகிறது.
கவிஞர் பொன்முகலி தன்னுடைய ஒரு
கவிதையில், “நிலவு வானில்
தும்பை பூவை போல மலர்கிறது” என எழுதியிருப்பார்.
பரவசமூட்டும் வரி. நிலவு மலர்கிறது
என்கிற வரியே அத்தனை அழகாக இருக்கிறது. இங்கு ஓளிர்வது நிலவா,
மலரா? இரண்டையும் பிரித்துப்பார்க்க இயலவில்லை
என்றே கவிஞர் கூறுவதாக எனக்குப் படுகிறது. அழகான கவிதை.
நீ
ஏனிப்படி
வெறுமையான
வானத்துக்குள்
மறைந்தாய்
மெல்லியப்பனிகூட
விழுகையில்
இந்த
பூமியில் தானே
விழுகிறது.
இந்த
கவிதை இஸூமியின் காதலரில் ஓருவரான அட்சுமிச்சியின் இறப்புக்குப் பிறகு
எழுதப்பட்டதாக அறியப்படுகிறது. ஜப்பானிய
கவிதைகளுக்கே உரிய எளிமையுடன் , சுருக்கமாக இந்த கவிதை
இழப்பின்வலியை பேசுகிறது
இது
மழையும் பனியும்
பொழியும் காலம்
இரவுகளை
உறக்கமின்றி கழிக்கிறேன்
உன் பலகீன அன்பை போல
விடியலில் படியும்
பனித்துகளைப்
பார்த்தபடி.
மழைக்கால
இரவு. தனித்திருக்கிறாள் தலைவி . தலைவன் தலைவியை நீங்கி செல்கையில்
கையோடு அவள் தூக்கத்தையும் எடுத்து சென்று விட்டான். உறக்கமின்றி அவள் இரவுகளை கழிக்கிறாள். தலைவன்
அருகில் இருக்கும் போது இருக்கும் உறுதி அவன் பிரிந்து
சென்றப்பின் இருப்பது இல்லை.
அவன் அன்பு மாறிவிடக்கூடியதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. மெல்லிய பனித்துகள் அவனின் கரைந்து விடக்கூடிய
அன்பை போல அவளுக்குத் தோன்றுகிறது. பலகீன அன்பு என்ற சொல்லில் தெரிகிறது, அவளின்
நம்பிக்கையின்மை. தொழுவத்து மாடு ஈ விரட்டுகையில் எழும்
மணியோசையைக் கேட்டபடி இரவெல்லாம் விழித்துக் கிடக்கிறாள் நம் சங்கத் தலைவி ஒருத்தி.
படப்பொறிக்கொண்டபாம்பின்
தலை நடுங்கும்படி வலுத்துக் கொட்டும் மழையிரவில் அதிர்ந்து இடிக்கும் இடியோசையைக்
கேட்டபடி தலைவன் இல்லாத
இரவுகளை கழிக்கிறாள் இன்னொருத்தி.(களிநெல்லிக்கனி-
கவிஞர்.இசை)
“கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப
படு
மழை உருமின் உரற்று குரல்
நடுநாள்
யாமத்தும் தமியம் கேட்டே”
வெவ்வேறு தேசங்களை சேர்ந்தவர்களாயினும் மூவர் குரலும் ஒன்றுப் போலவே ஒலிக்கிறது நம் காதுகளில்.
பெயரில்
தான் நீளம்,
இந்த
மழைக்கால இரவு.
நாம்
ஒருவரையொருவர்
பார்த்துக்
கொண்டிருப்பதை தவிர
வேறெதுவும்
செய்யவில்லை
அதற்குள்
விடிந்து
விட்டது..
இன்னொரு மழைக்கால
இரவு . தலைவனும் தலைவியும் தனித்திருக்கிறார்கள். அவன்
இல்லாத போது நீண்டு கிடந்த இரவு தான் . இப்பொழுதோ அவன் அருகிருக்கையில்
குறுகி விட்டது. சொல்லிக்கொள்ளும்படி அப்படியொண்ணும் நீளமாய் இல்லை இந்த மழைக்கால இரவு ஒன்றுமே நடக்கவில்லை. ஒருவரையொருவர் வெறுமே
பார்த்துக்கொண்டிருந்தோம். அதற்குள்
விடிந்துவிட்டது என இரவைச் சாடுகிறாள் தலைவி.
குழம்பி நிற்கிறது இரவு. நீளமும் குறுகலும் நம் மனம் செய்யும் மாயமல்லவா? இரவென்ன
செய்யும் , பாவம்.
கோவில்
மணி ஒலிக்கும்
மாலை
மிகுந்த
துயரளிப்பது
இதை
நான்
நாளை
கேட்பேனோ
எனக்கு
தெரியவில்லை
பிரிவில்
உழல்பவருக்கு இரவு, மாலை இரண்டுமே துயரளிப்பவை தான் . இருந்தாலும் மாலை இரவைவிட அதிகம் அச்சம் தருவதாய் இருக்கிறது. காரணம்
மாலை கொடும் இரவின் வருகையைஅறிவிக்கிறது.
நம் முல்லை நிலத்து சங்கப்பாடல்களில் மாலையை , பெரும்புன் மாலை”, “கொலை குறித்தன்ன மாலை”, “புலம்புகொள் மாலை”, “ புன்கண் மாலை”, “கையறு மாலை” என்று விதவிதமாக பாடிவைத்துள்ளனர்
புலவர் பெருமக்கள் என கவிஞர் இசை தனது நார் இல் மாலை என்னும் கட்டுரையில்
குறிப்பிடுகிறார்.
இந்த
கவிதையில் கோவில் மணி ஒலிக்கிறது. இரவு நெருங்கிவிட்டதை குறிக்கும் மணி அது. அதனால்
அது துயரளிக்கிறது. இந்தப்பிரிவுத்துயர் என்னை கொன்றாலும் கொன்றுவிடும். நாளை இந்த
மணியோசையைக் கேட்க நான் இருப்பேனோ மாட்டேனோ என கலங்குகிறாள் தலைவி.
இப்பொழுது
உன்னை
ஓரே
ஒருமுறை
மட்டுமே
பார்க்க
நேர்ந்த போதும்
நான்
உனக்காய்
ஏங்கியப்படி
இருப்பேன்
கண்டங்களை
கடந்து
உலகங்களை
கடந்து.
பிறவிகளை
கடந்து.
உன்னை
ஒரே ஒருமுறை தான் பார்த்திருக்கிறேன் .
ஆனால் நம் சந்திப்பின் நினைவுகளோ என்றென்றும் என்னைத் தொடர்வது.
உன்னை எண்ணியெண்ணி ஏங்க வைப்பது என்கிறார் கவிஞர்.
“இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்
நம்மையு
டையவன் நாராயணன்நம்பி” என்னும்
ஆண்டாளின் குரலை நினைவுப்படுத்துகிறது இந்தப்பாடல்.
நான்
எனக்கே
எனக்கென
மறதியின்
மலரைப்
பறிக்க
எண்ணினேன்
ஆனால்
அது
அவனின்
இதயத்தில்
ஏற்கனவே
மலர்ந்திருப்பதை
கண்டறிந்தேன்.
காதலர்
இனி வரபோவதில்லை. அவரை நினைத்து ஏங்குவதில் இனி பயனில்லை . மறந்துவிடலாமென
முடிவெடுத்து. மறதியின் மலரை பறிக்க எண்ணுகிறாள் அவள். ஆனால் அதையும் அவன் ஏற்கனவே பறித்துக்கொண்டுவிட்டான். மறதி கூட
அவளை கைவிட்டுவிட்டது. ஒருவரை மறக்க முடியவில்லை என்பதை எவ்வளவு நுட்பமாக
கூறுகிறாள் பாருங்கள்.
இன்னும்
சில கவிதைகள்.
நான் உணர்ந்ததையெல்லாம்
கைவிடுதல்
இன்னும்
துயர்மிகுந்தது
நான் உன்னுடன்
நெருங்கியிருந்ததால்.
இவ்வுலகில்
காதலுக்கென
எந்த
நிறமும் இல்லை
இருந்தும்
என்னுடல்
முழுவதும்
ஆழமாய்
உன்
அன்பின் சாயம்
மாலைகளில்
நீ
என்னிடம் வரும் பாதைகள்
இப்பொழுது
புதர்
மண்டி
அடையாளமற்று
போய்விட்டன
துயரத்தின்
இழைகளாய்
சிலந்தி
வலைகள் மட்டுமே
அதன்
மேல்
இன்னமும்
படர்ந்தபடி
விரைவில்
நான்
இல்லாமல்
ஆகிவிடுவேன்
இவ்வுலகிற்கப்பால்
செல்கையில்
எடுத்துச்
செல்ல
இன்னும்
ஒரு சந்திப்பின்
நினைவு
மட்டும் கூடுதலாகக் கிடைக்குமா?
இருளிலிருந்து வெளியேறி
ஒரு
இருண்ட பாதையில்
என்
பயணத்தை தொடங்குகிறேன்
மலையோரத்து நிலவே
என் மேல் ஓளிர்.
இஸூமி
ஆழமான மன உணர்வை கொண்டவராக அக்கொந்தளிப்பும் அலைகழிதலும் மிகுந்தவராகவும்,
வாழ்வின் மீது தீரா காதலும் பெரும் சுதந்திர உணர்வுடையவராகவே தன் கவிதைகளில் வெளிப்படுகிறார் . மொழிப்பெயர்ப்பில் சில உணர்வுகள் நீர்த்து போக
வாய்ப்பிருந்தாலும், எளிமையும் கருத்து செறிவுமாக அவரது கவிதைகள் அவரது
அனுபவங்களின் பிரதிப்பலிப்பாகவே உள்ளது.
(நீலி மின்னிதழில் வெளி வந்தது)
.jpg)
Comments
Post a Comment