தி ஒடிசி- ஒரு விமர்சனம்
கிறிஸ்டோஃபர் நோலனின் தி ஒடிஸி (The
Odyssey) திரைப்படம் முழு உலகையும் மீண்டும் ஹோமரின் பால் ஈர்த்திருக்கும்
என்றே எனக்குத் தோன்றியது. எந்த கிளாசிக் படைப்புகளைத் திரைப்படமாக எடுத்தாலும் அதன் வாசகர்களுக்கு தங்களது
அபிமான கதைகளை அதன் பிரமாண்டத்தை, சொற்கள் வெளிப்படுத்தும் அக நுணுக்கங்களை, கதாப்பாத்திரங்களை,
திரையில் உயிருடன் பார்க்கும் ஆவலும் எதிர்பார்ப்பும் இருக்கும் அதேநேரத்தில் தங்களது
மனத்தில் உள்ள பிம்பங்களை அந்தத் திரைப்படம்
கெடுக்காமல் இருக்க வேண்டும் என்ற அச்சமும் இருப்பது இயல்பே. ஹோமரை வாசித்த ஒருத்தியாக
பண்டைய கிரேக்க கவிஞரின் ரசிகர்களைப்
போலவே, நானும் சில அச்சங்களுடனேயே இத்திரைப்படத்தைக் காணச் சென்றேன். பெரிய திரையறிவோ திரைப்படங்களில் ஆர்வமோ இல்லாத
எனக்கு பாலிஃபிமஸ்(Polyphemus)
எனப்படும் ஒற்றைகண் சைக்கிளாப்சையும், சைரன்களையும்
, லாஸ்ட்டிரிகன்ஸ்(Laestrygonians) என்றழைக்கப்பட்ட கவசமணிந்த நரமாமிசம் உண்ணும் அரக்கக்கும்பலையும்
எவ்வாறு ஒரு திரைப்படத்தில் சித்தரி்த்து
விடமுடியும் என்ற எதிர்பார்ப்பின் குறுகுறுப்பும் இருந்தது
தனிப்பட்ட முறையில் இந்த திரைப்படம் எனக்கு மிகவும்
பிடித்திருந்தது . இன்னும் சொல்லப் போனால் ஹோமரின் வாசகியாக இந்தப்படம் எனக்கு எவ்வித ஏமாற்றத்தையும் அளிக்கவில்லை, மூச்சை
நிறுத்தச் செய்யும் அபாரமான ஒளிப்பதிவும் புலன்களைச் சில்லிடச்
செய்யும் பின்ணணி இசையும் மேதைமையின் உச்சம். இதில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களது
கதாபாத்திரங்களை கச்சிதமாகச் செய்திருந்தனர். ஒரு இயக்குனராக நோலன் எடு்த்திருக்கும்
முடிவுகளும் ஹோமரின் ஓடிசியை அவர்அணுகிய விதத்தையும் பாராட்டியே ஆக வேண்டும்.
ஒரு பழைய கதையை
முற்றிலும் புதிய கோணத்தில் நமக்குக் காட்டுவது எந்தவொரு இயக்குநருக்கும் மிகப்பெரிய சவாலாகும். சைக்ளோப்ஸை அசாதாரண ஒன்றாக,
அதை ஓடிசியசின் வீரர்கள் முதன்முதலில் பார்த்த போது உணர்ந்ததைப்
பார்வையாளர்களாகிய நாமும் உணரும்படி காட்டுவது கடினம். ஆனால் அதை நோலன் சிறப்பாகச்
செய்துள்ளார்.
இது முற்றிலும் ஹோமரின் காவியத்தை மட்டுமே தழுவி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் அல்ல. இது நோலனின் ஓடிசி. ஆனால் ஹோமரை முற்றிலும் வாசித்து
அறிந்த ஒருவரது பார்வையில் உருவான ஒடிசி. சில முக்கியமான அத்தியாயங்களை அவர் காட்சிப்படுத்திய
விதம் மிகவும் தனித்துவமானது. ஒரு 3 மணி நேர
திரைக்கதையை இவ்வளவு விஷயங்களை
உள்ளடக்கியும், இயன்றவரை
மூலக்கதைக்கு நெருக்கமாகவும் உருவாக்கியிருப்பது நோலன்
ஏன் ஹாலிவுட்டின் முக்கிய படைப்பாளியாக கருதப்படுகிறார் என்பதற்கான சான்று.
மேலைநாட்டு
இலக்கியத்தின் அடித்தளமாக விளங்கும் ஹோமருடைய படைப்பின் மிகவும்
புகழ்பெற்ற காட்சிகளை, நோலன் தனது சொந்த பாணியில் மிக கவித்துவமாகக்
காட்சிப்படுத்தியுள்ளார்.
திரைப்படத்தின் தொடக்கத்தில் கடற்கரையில் பாதி புதைந்துள்ள நிலையில் ட்ரோஜன் குதிரையைப் பார்த்தவுடன் எனக்கு
மெல்லிய ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. எப்போதும்
முன்னங்காலை உயர்த்திய நிலையில் பிரமாண்டத்தையும் கம்பீரத்தையும் பிரதிபலிக்கும் ஒன்றாக
என் கற்பனையில் அது இருந்ததே அந்த அதிர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம்.
ட்ரோஜன்கள் வந்து அந்தக் குதிரையைத் தங்களது நகர வாயிலுக்குள்
இழுத்துச் செல்கிறார்கள். அது சமாதானத்திற்கான பரிசு என்று அவர்கள் நம்பும்படி செய்யப்பட்டிருக்கிறது.
ட்ராயில் அவர்கள்
கிரேக்கர்களோடு பத்து ஆண்டுகள் போரிட்டு
இருப்பார்கள். மிக நீண்ட போர் அது.
இன்றைய துருக்கியில் கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள்,
பண்டைய காலத்தில் உண்மையில் அங்கு ஒரு போர் நடந்திருக்கலாம் என்றும், அதுவே ஒடிசிக்கு முந்திய படைப்பான இலியாட்டின்
அடிப்படையாக அமைந்திருக்கலாம் என்றும் சொல்கின்றன.
அந்தப் போர் உண்மையிலேயே பத்து ஆண்டுகள் நீடித்ததா?
தெரியாது.
ஒருவேளை இல்லாமலும்
இருக்கலாம் .
நாட்டுப்புறக் கதைகளாலும் தொன்மமாக்கலாலும் வரலாற்றின்
போக்கில் நிகழ்வுகள் பெரிதாக்கப்படுவது இயல்புதான். இருந்தாலும் அதன் மையத்தில் ஏதோ
ஒரு வரலாற்று உண்மையின் விதை இருக்கத்தான் செய்கிறது.
ட்ரோஜன் போர் மிகக் கொடூரமானது. இரு தரப்பிலும் மக்கள்
இறந்துகொண்டிருந்தார்கள். போர் ஒரு முடிவற்ற தேக்கநிலையை அடைந்திருந்தது.
.
இறுதியில் அதை கிரேக்கர்களின் வெற்றியாக மாற்றியது
ஒடிஸியஸின் அறிவு. ஒடிஸியஸ் என்னும் கதாப்பாத்திரத்தை வரையறுக்கும் அடிப்படைப் பண்பு
தந்திரம். அவன் சாமனியர்களின்
( everyman) பிரதிநிதி. ஒடிஸியஸின் பிரதான இயல்பு தந்திரமும் சூழ்ச்சித் திறனும்.
அவன் பல்திறன்களைக் கொண்டவன் என்றும் பல்வித்தைகளை
அறிந்தவன்(polymetis)
என்றும் பல வழிமுறைகளை கையாளுபவனாகவும் பல திருப்பங்களை
மேற்கொள்பவனாகவும் ஏற்படுத்த கூடியவனாகவும்
இருப்பவன் (polytropo) என்றும்
ஹோமர் கூறுகிறார்.
ஆனால் நோலனின் ஒடிசியஸ்
புத்திசாலி மட்டுமல் , நல்லவன்,
தனது கடமையைச் செய்பவன். ஜீயஸின் விதிகளை மதிப்பவன். தனது
வீரர்களை கைவிடாதவன். ஹோமரின் ஓடிசியஸ், அவனது வீரர்களைப்
பன்றிகளாக மாற்றிய சர்சே என்னும் மந்திரவாதப் பெண்ணுடனும் பின்னர் கேலிப்சோவுடனும்
உறவில் இருந்தவன். ஆனால் நோலனின் ஒடிசியஸ் மனைவிக்கு விசுவாசமாக இருப்பவன்.
தான் செய்த போரின் கொடூரங்களையும், தன்னால் நிகழ்ந்தவற்றையும்,
தனது வீரர்களின் மரணங்களையும் மறந்துவிட ஒடிஸியஸ் ஏங்குகிறான்.
ட்ராய் முற்றுகை அனுபவத்தால் ஒடிஸியஸ் போருக்குப் பிந்தைய
மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறான். அந்த நினைவுகள்
அவனை துயருறச் செய்கின்றன.
நோலனின் ஒடிசியும்
ஹோமரின் ஒடிசியைப் போலவே ஒரு நேர்கோட்டில் பயணம் செய்யாத
கதை அமைப்பை கொண்டது. திரைக்கதை முன்னும் பின்னும் மாறி மாறி ஊசலாடுகிறது.
ஒரு கதைக்குள் இன்னொரு கதை விரியும் பகுதிகளும் மூலத்தில் உண்டு.
“தி
ஒடிசி “ மூன்று காலகட்டங்களில் இயங்குகிறது .ட்ரோஜன் போருக்கு முந்திய நினைவுகளையும்
சேர்த்துக் கொண்டால் மொத்தம் நான்கு காலகட்டங்களில் கதை நிகழ்கிறது.
நாம் முதன்முதலில் ஒடிஸியஸைச் சந்திக்கும்போது, அவன்
கலிப்ஸோவின் தீவில் இருக்கிறான். உண்மையில் அவனது நீண்ட பயணம் முடிவை நெருங்கியிருக்கிறது.
அவன் திரும்பிச் செல்ல வேண்டிய இடம் அவனது அரசான இதாகா. ஒடிஸியஸ் இதாகாவின் மன்னன்.
ஹெலனை முன்னிட்டு நடந்த ட்ரோஜன் போரின் காரணமாக அவன்
இருபது ஆண்டுகளாக வீட்டை விட்டுப் பிரிந்திருக்கிறான். அந்தப் போர் ஹெலனுக்காக நடந்ததாக
வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும், அது ஒருவகையான
பொய் பிரச்சாரமே. போருக்காக முன்வைக்கப்பட்ட காரணம் அது. உண்மையில் அது அதிகாரத்தையும்
அரசியல் வலிமையை வெளிப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட போர்.
கதையின் நிகழ்காலத்தில்
நாம் ஒடிஸியஸைச் சந்திக்கும்போது, அவன் தனது வீடு திரும்பும் பயணத்தின் இறுதிக் கட்டத்தைத்
தொடங்க இருக்கிறான்.
அதே நிகழ்காலத்தில், இதாகாவில் அவனது மகன் டெலிமக்கஸ்
நமக்கு அறிமுகமாகிறான். தந்தையை அறியாமலேயே வளர்ந்தவன் . சிறுவயதிலேயே போருக்குச் சென்ற ஓடிசியசைப்
பற்றிய நினைவுகள் அவனுக்கு அதிகம் இல்லை. பாணர்களின் பாடல்கள்
மூலமாகவும் தன் தாயின் மூலமாகவும்
அவன் தனது தந்தையை அறிகிறான்.
ஒடிஸியஸின்
மனைவியும் இதாகாவின் அரசியுமான பெனலோப்பியையும் இதாகாவையும் எதிரிகள் சூழ்ந்திருக்கிறார்கள்.
முரட்டுத்தனமும் குரூரமும் நிறைந்தவர்களான
அவர்கள். ஒடிஸியஸின் மனைவியை மணக்கப் போட்டியிடுகிறார்கள்; பெனிலோப்பியை மணப்பதன் வாயிலாக இதாகவின்
அரியணையை அடைவதே அவர்களது நோக்கம்.
கதை பின்னோக்கி நகர்கையில் நாம்
ஒடிசியசின் பயணத் தொடக்கத்திற்கே அழைத்துச் செல்லப்படுகிறோம்.
பின்னர் ட்ராய் நகரத்தின் வீழ்ச்சி வரை கதை பின்னோக்கிச் செல்கிறது.
வெற்றிப் பெற்று நாடு திரும்பும் ஒடிஸியஸ்
எப்படித் தனது படைவீரர்கள் அனைவரையும் இழந்து, தனியாக ஒரு தீவில் கரையொதுங்கினான் என்பதையும்
கதைக்குள் கதையாக நாம் காண்கிறோம்.
இவை அனைத்தும் ஹோமரின் மூலக் காவியத்தில்
இருப்பவையே.
திரைப்படத்தில் சில மாற்றங்களும் விடுபட்ட பகுதிகளும்
இருந்தாலும் கதையின் சாரத்துக்கும் அது ஏற்படுத்தும்
தாக்கத்துக்கும் பெருமளவில் திரைப்படம் விசுவாசமாகவே இருக்கிறது.
காலம் குறித்த தனது ஈர்ப்பைப் பற்றி நேர்காணலில் பேசும்
நோலன் , “என் திரைப்படங்களின் நேர்கோடற்ற கட்டமைப்பைப் பற்றி,
அது ஏதோ மிகவும் புதிதான புரட்சிகரமான
ஒன்று என்பதுபோல் நான் பல ஆண்டுகளாக எண்ணி கொண்டிருந்தேன், பேசியும் வந்திருக்கிறேன்.
ஆனால் இலக்கியத்தின் மிகப் பழமையான பிரதிகளில் ஒன்றுக்குத் திரும்பிச் சென்றால், அதிலேயே
முற்றிலும் தீவிரமாக இந்தக் கட்டமைப்பு
இருப்பதைக் காணமுடிகிறது. கதைகளுக்குள் கதைகள். பின்னோக்கி
ஓடும் கதைகள் என முற்றிலும் நேர்கோடற்ற
தன்மையுடன் இருக்கும் படைப்புகள் எனக்கு உற்சாகமளித்தது
என்கிறார்.
இந்த படத்தில்
நோலனின் தனித் தன்மை வெளிப்படும் இடங்களாக நான் கருதும் இடங்கள் மூன்று .
ஒன்று நோலனின் ட்ரோஜன் குதிரை . இரண்டு மாயக் கடற்பெண்டிரை
ஒடிசியசின் வீர்ர்கள் கடந்து செல்லும்
காட்சி. இறுதியாக சர்சே என்னும் மந்திரவாதப்
பெண்ணின் வீட்டில் நடைப்பெறும் காட்சி. இந்த மூன்று காட்சிகளையும் மகத்தான காட்சிகளாக
என்னை உணரச்செய்தது இசையே என்று
சொல்லலாம்.
ஒடிஸியஸ் உள்ளே காலியாக இருக்கும் ஒரு பிரம்மாண்டமான
குதிரைச் சிலையை உருவாக்கி அதை ட்ரோஜன்களுக்கான சமாதான பரிசாக விட்டுச்செல்வதின் மூலம் கிரேக்கப் படைகள் பின்வாங்கிவிட்டதாக ஒரு தோற்றத்தை
உருவாக்க முயல்கிறான். .
ஆனால் அந்தக் குதிரைக்குள் கிரேக்க வீரர்கள் மறைந்திருக்கிறார்கள்.
ஹோமரின் காலத்தில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பொதுவான
கிரேக்க பண்பாட்டு அடையாளம் இன்னும் உருவாகவில்லை. தனித்தனி அரசுகளாகவும் தீவு நாடுகளாகவும்
இருந்த மக்கள் ட்ராய்க்கு எதிராகப் போரிட ஒன்றிணைந்திருந்தார்கள்.
அவர்கள் அந்தக் குதிரைக்குள் ஒளிந்திருக்கிறார்கள்.
அந்தக் குதிரையை ட்ரோஜன் நகரத்து வாயிலுக்குள் பல வீர்ர்கள் சேர்ந்து இழுத்துச்
செல்கிறார்கள். அது எல்லோருக்கும் தெரிந்த கதை.
மேற்கத்திய நாடுகளில் ஓடிசி உயர்நிலைப் பள்ளிகளில் இலக்கியப் பாடமாக வைக்கப்பட்டுள்ள
ஒன்று. அவர்கள் மீண்டும் மீண்டும் வாசித்த
ஒன்று. மக்களது மனங்களில் அது கிட்டத்தட்ட ஒரு கார்ட்டூன் காட்சியைப் போல பதிவாகி இருப்பது. தேய்வழக்காக
மாறிவிட்ட ஒன்று . சர்க்கஸில் ஒரு சிறிய கோமாளிக்
காரிலிருந்து ஏராளமான கோமாளிகள் திடீரென்று வெளியே வருவதைப்போல, குதிரைக்குள் இருந்து
கிரேக்கர்கள் வெளியே குதிப்பதாகவே அவர்களது கற்பனையில் அது உறைந்திருக்கலாம்.
அப்படி பழகிப்போன ட்ரோஜன் குதிரைக் காட்சியை எப்படிப் புதிதாகக் காட்ட
முடியும்?
பழைய கதைகளை புதிய கண்களோடு பார்ப்பதே கலை. பண்டைய
உலகில் 'ஸ்பாய்லர்' என்ற ஒன்றே இல்லை, நாம் நன்கறிந்த செவ்வியல்
கதைகளை படமாக்கும் போது கதையைத் திரையில் காண்பதற்கு மட்டுமல்லாமல் , கதையை இந்த இயக்குநர் எப்படிச்
சொல்கிறார் என்பதைப் பார்க்கவே நாம் இத்தகைய படங்களைத்
திரையில் பார்க்கிறோம்.
நோலன் அந்தப் பழங்கால ரொமாண்டிக் கற்பனையை உடைத்து, அதை யதார்த்தத்திற்கு நெருக்கமாகவும்
மிக துல்லியமாகவும் சித்தரிக்கிறார்.
சிறந்த இலக்கியத்தைப் போலவே சிறந்த திரைப்படங்களும்
நமக்கு ‘அந்நியப்படுத்தப்பட்ட’ ஒரு அனுபவத்தை அளிக்கின்றன.
நாம் ஏற்கெனவே அறிந்த ஒன்றை அவை புதிதாகக் காணச் செய்கின்றன.
பழக்கத்தின் காரணமாக இயந்திரத்தனமாகிவிட்ட நமது பார்வையை அவை குலைக்கின்றன.
ரஷ்ய உருவவியலாளர்கள்( Russian formalists) இதை அந்நியப்படுத்தல் (defamiliarization) என்று
குறிப்பிடுகிறார்கள்.
ஒரு கலைஞன்
தொலைநோக்குப் பார்வையுடைய படைப்பாளியாக, மக்களுக்குப் பரிச்சயமான ஒன்றை புதிய
விதத்தில் முன்வைக்க வேண்டும். அப்போதுதான் அதை அவர்களால் அதை ரசிக்கமுடியும்
இந்தத் திரைப்படம்
செவ்வியல் கதைகளுடைய அற்புதத்தன்மையையும்
நவீன படைப்புகள் முன்வைக்கும் உளவியல்
யதார்த்தத்தையும் ஒன்றாக இணைக்கிறது.
ட்ரோஜன் குதிரையை வெளியிலிருந்து
பார்த்து பழகிய பார்வையாளர்கள் நோலனின்
ஓடிசியில் அதை உள்ளிருந்து பார்க்கின்றனர்.
நோலன் பார்வையாளர்களை அந்தக் குதிரையின்
உள்ளே அழைத்துச் செல்கிறார்.
உள்ளே இருக்கும் வீரர்கள் அச்சத்தில் உறைந்திருப்பதை
நாம் காண்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் சத்தம் எழுப்பக் கூடாது.
ட்ரோஜன்கள் அது உண்மையிலேயே உள்ளே காலியாக இருக்கிறதா
என்று சோதிப்பதற்காக அதன் பக்கவாட்டில் ஈட்டிகளையும் வாள்களையும் குத்தும்போதுகூட அவர்கள்
அமைதியாக இருக்க வேண்டும்.
ஒரு வீரனின் உடலை ஈட்டி துளைத்துவிடுகிறது.
அவன் வலியால் கத்திவிடாமல் இருக்க இன்னொரு வீரன் அவனது
வாயைப் பொத்துகிறான்.
ஒரு சத்தம் எழுந்தால்கூட அவர்களின் முழுத் திட்டமும்
வெளிப்பட்டுவிடும்.
அந்தக் குதிரைக்குள் அவர்கள் தங்களது வியர்வை, சிறுநீர்
உள்ளிட்ட உடல்கழிவுகள் அனைத்துடனும் புழுங்கிக்கொண்டிருப்பது
நமக்குச் சொல்லப்படுகிறது. பத்தாண்டுகளாக
போரில் ஈடுபட்டு இருப்பவர்கள் இதைப்போன்ற அடைப்பட்டுள்ள சூழ்நிலையில் எந்த
மனநிலையில் இருப்பார்கள் என்பதை குதிரைக்குள் உள்ளிருந்து பார்க்கும் போது நம்மால் உணர
முடிகிறது.
வெளிக்காட்டப்படாத உணர்ச்சிகளும் ஓடுக்கப்பட்ட ஆற்றல்களும் ஒருபோதும் மறிப்பதில்லை தற்காலிகமாக உயிருடன் புதைக்கப்படும் அவை பின்னர் மிக கோரமான வடிவங்களில் வெளியே வரும்
என்று கார்ல் யங் தனதுThe Archetypes and the Collective Unconscious என்ற
நூலில் குறிப்பிடுகிறார்.
அதனால்தான் பின்னர், ஒடிசியஸ் “பத்து ஆண்டுகளின் ஆத்திரம் ஒரே இரவுக்குள்
வடிக்கப்பட்டது.” என்று ட்ராய் நகரத்தின் மீது அவனது படையினர்
கட்டவிழ்த்துவிட்ட வன்முறையைப் பற்றி குறிப்பிடுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ட்ரோஐன் குதிரையை உள்ளுக்குள் இருந்து காண்பிப்பது
கிரேக்கர்களின் அழிவுச்செயல்களுக்கு விசித்திரமான
முறையில் நியாயம் கற்பிப்பதாக தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
இந்தக் காட்சியில் ஒலியமைப்பை வார்த்தைகளால் விவரிக்க
இயலாது. அற்புதமான இசை.
வியர்வைத்துளிகள் சொட்டும் ஒலி, குதிரைக்குள் நீர் நிரம்பும் ஓசை உலோகம்
உலோகத்தோடு மோதும் சத்தம், ட்ராய் நகரத்து குதிரைப்படையினர்
நெருங்கிவரும்போது கேட்கும் குதிரைக் குளம்புகளின் உருளும் ஓசை
என அனைத்தும் சேர்ந்த ஒரு இசைக்கோர்வை அந்தக் காட்சியின் பிரமாண்டத்தை அதிகரிக்கிறது.
குதிரைக்குள் இருக்கும் வீர்ர்களின் அச்சமும் மற்ற உணர்வுகளும் பின்ணணி இசை வழியாகவே பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டு
விடுகிறது.
இந்தப் படத்துக்கு
லுட்விக் கிரான்சனின் இசை மிகப் பெரிய பலம். இந்தப் படத்தில் லுட்விக் கோரன்சன்
(Ludwig Göransson) வழக்கமான ஆர்கெஸ்ட்ரா இசைக்கருவிகளைப் பயன்படுத்தாமல் , இயற்கை
மற்றும் பண்டைய இசைக் கருவிகளைப் பயன்படுத்தி ஒரு தனித்துவமான ஒலி உலகத்தை உருவாக்கியுள்ளதாக
எங்கோ வாசித்தேன்.
லுட்விக் ஏற்கெனவே நோலனின் பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து
பணியாற்றியிருக்கிறார். நோலனை அறிந்தவர் அவர். அவரது இசையைப்பற்றி தனி கட்டுரை எழுத வேண்டும்
ஒடிஸியஸ் தனது வில்லினுடைய
நாணை இழுக்கும்
போது யாழ் மீட்டுவதைப் போன்ற , அதன் ஒரே
ஒரு தந்தியை இழுத்து அதிரச் செய்வதைப் போன்ற ஒரு ஒலி
எழுகிறது. வில் ஒரு ஆயுதம். அது
எழுப்பும் ஒலிக்கு லுட்விக் ஹார்ப்பின்(Harp) ஒலியைப்
பயன்படுத்தியுள்ளார். இந்த
கதை காலங்காலமாக வாய்வழியே பாணர்களின் பாடலாகச் சொல்லப்பட்ட
ஒன்று. பாணனும் போர்வீரனும்,
கவிஞனும், மன்னனும் கதைச்சொல்லியும் இசை என்னும்
ஒரு புள்ளியில் இணையும் கதை. ஹார்ப்
போன்ற பழைய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இருப்பது கதைசொல்லலின்
நுட்பத்தைக் காட்டுகிறது.
கதைப்பாடலாகச் சொல்லப்பட்டு
வந்த ஒன்றை
நவீன திரைப்படமாக்கும் போது அதே உணர்வைப் பார்வையாளர்கள்
பெறும் வண்ணம் இசை அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. இப்படிப்பட்ட ஒரு காவியத்தை வேறெப்படியும் கௌரவித்துவிட
முடியாது. மிகவும் தன்னுணர்வுள்ள, தன் கலைவடிவத்தையே திரும்பிப் பார்க்கும் ஒரு உத்தி
இது.
நோலன் அவரது
திரைப்படங்களில் மௌனத்தைப் பயன்படுத்தும் விதம் அசாதாரணமானது.
அவரது ஓப்பன்ஹைமர் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தவர்கள்
இதை உணர்ந்திருக்கலாம். இந்த படம் முழுவதும் அணுகுண்டு வெடிப்பை பற்றிய பதற்றம் வளர்ந்தபடி இருக்கும். ஒரு பிரம்மாண்டமான வெடிச்
சத்தத்திற்காக பார்வையாளர்கள் காத்திருக்கிறார்கள்.
ஆனால் நோலன் அந்தச் சத்தத்தை நமக்குத் தராமல்,
அந்தக் கணத்தை மௌனத்திற்குள் தள்ளிவிட்டிருப்பார்.
அதை ஒரு அற்புதமான கலைத் தேர்வாகவே நான் கருதினேன்.
இந்தப் படத்தில் சைரன்கள் வரும் காட்சியில் அவர் அதை
மீண்டும் செய்கிறார். ஒடிஸியஸும்
அவனது வீரர்களும் தங்கள் பயணத்தின் ஒரு கட்டத்தில் சைரன்கள் என்னும் மாயக் கடற்பெண்டிர்கள்
இருக்கும் இடத்தைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த நீர் தேவதைகள் பாடும் பாடல்கள்
எவரையும் தன்வசமிழக்கச் செய்பவை. மாலுமிகளை மரணத்தை நோக்கி இழுப்பவை.
அவர்களது வசீகரப்பாடல்களால் ஈர்க்கப்படும் மாலுமிகள்
தங்கள் கப்பல்களையே கைவிட்டு கடலுக்குள் குதித்துவிடுவார்கள் .
அதனால் ஒடிஸியஸ் தன் வீரர்கள் அந்தப் பாடலைக் கேட்காமல்
இருக்க அவர்களது காதுகளை மெழுகால் அடைத்துக்கொள்ளும்படி
கட்டளையிடுகிறான்.
ஒடிஸியஸ் மட்டும் அந்தப் பாடலைக் கேட்டு உயிருடன் தப்பிய
முதல் மனிதனாக, ஒரே மனிதனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.
அவனை தன்னை கப்பலின் பாய்மரக் கம்பத்தில் கட்டிவிடுமாறு
கட்டளையிடுகிறான். மற்ற வீரர்கள் தங்களது காதுகளை
மெழுகால் அடைத்துக்கொள்கிறார்கள். அவர்களது கப்பல் சைரன்களைக் கடந்து செல்கிறது. வீரர்களில் ஒருவன் மட்டும் அந்தப் பாடலைக் கேட்கும்
ஆசையில் காதிலிருந்த மெழுகை அகற்றுகிறான்.
விவரிக்க இயலா உணர்வுநிலையை அடையும் அவன் கடலுக்குள்
குதித்து விடுகிறான். இந்தக் காட்சியின் மிக அற்புதமான அம்சம் மௌனம். பார்வையாளர்களான
நாம் அந்தப் பாடலை கேட்கவில்லை, ஆனால் அதன் வசீகரத்தையும் வீரியத்தையும் அச்சம்தரும்
வகையில் உணர்கிறோம்.
ஒரு வயலினின் அதிர்வைப் போன்ற
மெல்லிய ஒலி மட்டுமே அந்த காட்சி
முழுவதும் ஒலிக்கிறது. அது உடலின் நரம்பொன்றைத் திடீரென்று யாரோ மீட்டுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
கேமரா ஓடிசியசின்(மேட்
டேமோன்) முகத்தை நெருக்கமாகக் காட்டுகிறது. .முதலில் பேரானந்தத்தில் மூழ்கும் அந்த
முகம், மெதுவாகத் தாங்க முடியாத வேதனையை சுமக்கும் முகமாக மாறுகிறது.
பின்னர் அவன் தன் படையினரிடம் அந்தப் பாடலைப்பற்றியும்
அது ஏற்படுத்திய உணர்ச்சிகளையும்
விளக்குவதே அந்தக் காட்சியை ஒரு பேரனுபவமாக மாற்றுகிறது.
பேரானந்தத்துக்கும் சித்திரவதையைப் போன்ற வலிக்கும்
இடையே தன்னை துடிக்கச் செய்த அந்தப் பாடல், ஒருகாலத்தில் நம்மிடம்
இருந்து, பின்னர் நாம் இழந்துவிட்டவற்றின்
வலியைப் பற்றியது என்றும் ,நம்முடைய எல்லாத் தோல்விகளையும் பற்றியது என்றும்,
நாம் ஒருபோதும் நினைத்திராத ஆசைகளைப்
பற்றியது என்றும் ,அதோடு, நாம் எதிர்கொள்ள விரும்பாத உண்மையையும் தன்னுள் கொண்டிருப்பது என்றும் அவன்
கூறுகிறான்.
தான்
வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்பதை உணரும் அந்தக் கணத்தில்
ஒடிஸியஸ் ஒரு பித்துநிலைக்குள் நுழைவதை நாம் பார்க்கிறோம். இல்லாத ஒன்றின் இருப்பை
முழுமையாக நம்மை உணரச்செய்யும் அற்புதமான காட்சி.
அடி வயிற்றில்
குளிர்பரவச் செய்த இன்னொரு காட்சி சர்சே என்னும் மனிதர்களை விலங்குகளாக்கும் மந்திரவாதிப்
பெண்ணின் வீட்டில் நிகழ்வது.ஒட்டுமொத்த ட்ராய் நகரமக்களின் பிரதிநிதியாக
அவளைப் பார்க்கலாம். போரினால் அவளுக்கு ஏற்பட்ட துயரங்களை நேரடியாகச் சொல்லாமல்
கிரேக்க வீர்ர்களின் மீதான அவளது
வெறுப்பைக் காட்டுவதன் மூலம் நோலன் உணர்த்துகிறார் உணவைத் தேடிச்
செல்லும் ஓடிசியசின் வீரர்களுக்கு உணவளித்து
அவர்கள் ஒவ்வொருவரையும் பன்றிகளாக அவள் மாற்றுகிறாள். அப்போது
அவள் மெல்லியக்குரலில் ஏதோ ஒருப்பாடலை முணுமுணுக்கிறாள் . பின்ணணியில் ஒலிக்கும் அந்தப்பாடல் அக்காட்சியின்
அமானுஷ்யத்தையும் குரூரத்தையும் அதிகப்படுத்துகிறது.
தொடரும் ஓடிசியசுடனான அவளது உரையாடலும் வசனங்களும் மிக கூர்மையானவை. அபாரமான காட்சி.
நோலனின் ஓடிசி முழுக்க முழுக்க வீடு திரும்புதலின்
கதை. Nostos algos
என்று ஹோமரின் ஒடிசி அழைக்கப்பட்டது. Nostos என்ற கிரேக்கச் சொல்லுக்கு வீடு திரும்புதல் என்றுப்
பொருள். அந்த சொல்லிலிருந்து தான் 'நாஸ்டால்ஜியா' (Nostalgia)
நினைவேக்கம் என்ற சொல் உருவானது. Algos என்பது பிரிவின் ஏக்கத்தில் எழும்
வலியைக் குறிக்கிறது. ஹோமரின் ஒடிசி தனிமனிதனுடைய வீடு திரும்பும் வேட்கையை மட்டும்
சொல்லும் கதையல்ல. பல தனி கதைகளின் தொகுப்பு. ஒரு கதைப் பொக்கிஷம்.
இதில் போர்,தேடல், பழி
உணர்ச்சி என்று எல்லாம் அடக்கம்.
நோலனின் திரைப்படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தால்,
வீடு திரும்புதலுடனான அவரது ஈர்ப்பு படிப்படியாக
ஆழமடைந்து வருவதைப் பார்க்க முடியும். அவரது திரைப்படப் பயணம் முன்னேற முன்னேற, இந்தக்
கருப்பொருள் மேலும் செறிவும் ஆழமும் பெறுகிறது. அதைத் தொடர்ந்து கவனிப்பதே மிகவும்
சுவாரஸ்யமான அனுபவம்.
உண்மையில் ‘வீடு திரும்புதல்’ என்ற உணர்வின் மீது நம் அனைவருக்குமே ஈர்ப்பு இருக்கிறது. ஏனெனில் அது ஒரு நாயகனின்
பயணம். A hero’s journey.
நாம் ஒவ்வொருவருமே நமக்கான ஒரு நாயகப் பயணத்தில், ஒரு
தேடலில் இருக்கிறோம். நமது அகத்துக்குள் இருக்கும் ஒரு வீட்டுக்குத்தான்
நாம் அனைவரும் திரும்பிச் செல்ல முயன்றுகொண்டிருக்கிறோம். நாம் எங்கெங்கோ
பயணித்தாலும், எதையெதையோ அனுபவித்தாலும் இறுதியில் நாம்
திரும்ப முயல்வது அந்த வீட்டுக்கே. நாயகனின் பயணம்
எப்போதும் வட்டப் பாதையில் நிகழ்வது. பயணத்தின் முடிவில் வந்து
சேரும் இடம், நாம் தொடங்கிய அதே இடமாகவே இருக்கும்.
ஆனால் அந்தப் பயணம் நம்மை வெகுவாக மாற்றியிருக்கும்.
வீட்டிலிருந்து கிளம்பிய அதே மனிதராக நாம் வீடு திரும்புவதில்லை. நாம் முற்றிலும்
வேறானவர்களாக மாறி இருப்போம்.
வீடு திரும்புதல் பற்றிய கதைகள் உண்மையில் அடையாளத்தைப்
பற்றிய கதைகள். அவை இருப்பியல் மற்றும் அகநெருக்கடிகளைப்
பேசுபவை..
ஓடிசிக்கு முந்தியது இலியாட் .
இலியாட் போர் வேட்கையையும் சீற்றத்தையும் உத்வேகத்தையும்
மையமாகக் கொண்டது. ஓடிசி வீடு திரும்புதல்,மனக்காயங்களிலிருந்து
மீளுதல், விலகி இருத்தல் ஆகியவற்றைப் பேசுவது.
அமைதியான, சலிப்பூட்டக்கூடிய காலங்களில் நாம் இலியாட்
போன்ற கதைகளையும் கொந்தளிப்பான, போர்கள் நிறைந்த காலங்களில், ஓடிசிகளையும்
நாடுகிறோம் என்றெனக்குத் தோன்றியது. ஏனெனில்
அவை மீட்சிப் பெறும் உணர்வை நமக்கு அளிக்கின்றன.
இன்று இலியாட்டை
விட ஓடிசியே மக்களிடையே பிரபலமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
வீடு திரும்புதலைப்போலவே
மறக்க விரும்புதல் என்பதும் நோலனின் இன்னொரு முக்கியமான கருப்பொருள். ஒடிஸியஸின் நினைவுகளையும்
அதைக்குறித்த அவனது எண்ணங்களையும் புரிந்துகொள்ளாமல் அந்தக் கதாப்பாத்திரத்தை
நம்மால் முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாது. அனைத்தையும் மறந்துவிட வேண்டும்
என்ற அவனது ஏக்கத்தையும் புரிந்துகொள்ள முடியாது.
எல்லாவற்றையும் மறக்க விரும்பிய அவன் இறுதியில்
தன் நாட்டைவிட்டு, வெளிச்சத்தை நோக்கிச் செல்கிறான். அவனது பயணம் நமது பயணமாகவே
நமக்குத் தோன்றுகிறது.

Comments
Post a Comment